Tamilnadu

ஜனநாயகத்தை மதிக்கவேண்டிய நாளில், பாசிசத்தை புகுத்துகிறது பா.ஜ.க. - வைகோ குற்றச்சாட்டு!

சர்வாதிகார மற்றும் பாசிசத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குடியரசு நாள், தமிழர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், மறுபக்கம் துக்கமும் தருகிற நாள். 1950 ஜனவரி 26 குடியரசு தின நாளை கொண்டாடுகின்ற நாள். ஆனால் 1965 ஜனவரி 26 இந்தியை ஆட்சிமொழியாக ஆக்கியதை தமிழர்களுக்கு குடிகெடுக்கும் நாளாக அமைந்துவிட்டது என்று அண்ணா கூறிய பின்னர் ரத்த புரட்சி ஏற்பட்டது. கடந்த காலத்தை விட தற்போது அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மூர்க்கத்தனமாக மத்திய பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

'இந்திதான் இந்தியாவின் உச்சம். இதை யாரும் தடுக்க முடியாது' என்று உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதை ஏற்க மாட்டார்கள். பல மாநிலங்கள் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

vaiko 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கூட அதிரடியாக குண்டு வீசுவது போல் கொண்டு வந்து உள்ளனர். எந்த அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கவில்லை. சட்டத்தை ஆதரித்தவர்களே திருத்த சட்டத்துக்கு ஆதரித்து இருக்க மாட்டார்கள். நடுநிலையாக இருந்தவர்கள் கூட எதிர்க்க வேண்டிய நிலைமை வந்துள்ளது.

ஜனநாயகத்தை மதிக்க வேண்டிய நாளில் ஹைட்ரோகார்பன் உள்பட எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை என்று பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு அதை தடுக்க சக்தியில்லாமல் திராணி இல்லாமல் சுயமரியாதை இல்லாத அரசாக தமிழக உரிமைகளை காக்கின்ற கடமையை செய்யாத அரசாக இருக்கிறது.

Also Read: “இந்துவோ - முஸ்லிமோ அல்ல, நாங்கள் இந்தியர்கள்” : ஷாரூக்கானின் அசத்தல் பதில்! - video

தந்தை பெரியார் காலங்களை வென்ற தத்துவம். புதுயுகத்தின் தொலைநோக்காளர். பெரியாரின் சிலையை திருட்டுத்தனமாக உடைக்கும் கயவர்கள் அவரது புகழை மறைக்க முடியாது. யார் பின்புலத்தில் இருந்து தூண்டிவிட்டவர்களோ அவர்கள் மீது போலிஸ் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார்.