Tamilnadu
“ஃபைன் வேண்டாம் ஜூஸ் வாங்கிக்கொடு” : வாகன ஓட்டிகளிடம் நூதன முறையில் வசூல் செய்யும் போலிஸ்!
தமிழகத்தில் போக்குவரத்து போலிஸாரின் வசூல் வேட்டை தற்போது வரைக் குறைந்தபாடு இல்லை. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலிஸார் பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறையில் தான் அபராதம் வசூலிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இந்த திட்டம் வாயிலாக அபராத தொகையை போலிஸார் நேரடியாக வாங்கவே கூடாது. 24 மணி நேரத்தில் வங்கிகளின் கடன் மற்றும் பற்று அட்டைகள், இ-சேவை மையங்கள், பேடிஎம், அஞ்சலகம் உள்ளிட்ட ஆறு வகைகளில் அரசுக்கு அபராத தொகையை செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், அதன்படி போக்குவரத்து போலிஸார் வசூலிப்பதில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்து கெடுபிடிகள் சற்று அதிகமாகவே இருக்கும். அதனை சாதகமாகப் பயன்படுத்தி போக்குவரத்து போலிஸார் தங்களுக்குச் சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாகனங்களில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், சிக்னலை மீறிச் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைத் தவிர்க்க போலிஸார் பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், சிலர் அதனை சாதமாக பயன்படுத்தி காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மடக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.
இதேபோல், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகியவை இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, தாம்பரம் - வேளச்சேரி மற்றும் கிழக்கு தாம்பரம் மின்வாரிய அலுவலகம் அருகே விதிக்கப்படும் அபராத தொகையையும் போக்குவரத்து போலிஸார் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பெறாமல், விதிக்கப்படும் அபராத தொகையில் ஒரு பகுதியை மட்டும் பணமில்லா பரிவர்த்தனையில் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகையை வாகன ஓட்டிகளிடம் இருந்து பணமாக பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
இதைவிட சில கொடுமை என்னவென்றால் பணத்தை வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் பெறுவது போல், அதன் அடியில் வைத்து வாங்குவதாகவும், சில நேரங்களில் மீது தொகைக்குப் பதில், ஜூஸ் வாங்கிக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமெனப் போக்குவரத்து போலிஸார் வற்புறுத்தி வருகின்றனர் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து இதுபோல தவறான வழியில் வசூல் செய்யப்படும் போலிஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்து வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!