Tamilnadu
“தகுந்த நேரம் கிடைத்ததும் பா.ஜ.க-வில் இருந்து பிரிந்து செல்வோம்” : அ.தி.மு.க அமைச்சர் சூசக பேச்சு!
பா.ஜ.க இரண்டாவது முறை பதவியேற்றதில் இருந்து கொண்டுவரப்படும் திட்டங்கள் மற்றும் சட்டம் எதுவும் மக்களுக்கு பலனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரபட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் தங்களது செல்வாக்கை இழந்துள்ளது பா.ஜ.க.
அதுபோல, தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை கையகப்படுத்தி தனது காரியங்களை செய்துகொள்ளும் பா.ஜ.கவிற்கு எதிராக அ.தி.மு.க-வை சேர்ந்த சிலரே வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக குடியுரிமை சட்டத்திற்கு பா.ஜ.கவின் கட்டளைப்படியே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே வாக்களித்ததாக அ.தி.மு.கவினர் பேசி வந்தனர்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்து அ.தி.மு.க தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பொதுமக்களும் குற்றம்சாட்டி வந்தனர். பா.ஜ.கவிற்கு அ.தி.மு.க காட்டும் விசுவாசத்தை அக்கட்சித் தொண்டர்களே விரும்பவில்லை என்று தெரிந்தும் அ.தி.மு.க தலைமை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட கூட்டணி என்று அறிவித்துக்கொண்டாலும் அ.தி.மு.கவினர் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை சொல்லியோ, பா.ஜ.க கூட்டணி பற்றி வெளிப்படையாகப் பேசியோ வாக்குக் கேட்கவில்லை.
அப்படி இருந்தும் பா.ஜ.கவுடனான கூட்டுக்காக அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்ட மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் தோற்கடித்து ஆளும் கட்சியை முதன்முறையாக வீழச்செய்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.கவில் இருந்து வெளியேற தகுந்த நேரம் பார்ப்பதாக அ.தி.மு.க அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது இரு கட்சியினர் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழக கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.கவில் இருந்து பிரிந்து செல்ல நேரம் பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும், தகுந்த நேரம் வரும் போது பா.ஜ.கவில் இருந்து அ.தி.மு.க பிரிந்து தனியாகச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டத்திற்கு தங்கள் அமைச்சரவையிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இளையான்குடி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் இதுபோல பேசி இருப்பது பா.ஜ.க - அ.தி.மு.க கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் தமிழக தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமிய சமுதாய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்கின்ற உணர்வு ஒவ்வொரு இஸ்லாமிய வாக்காளரிடமும் இருக்கிறது. இதை என்னால் கண்கூடாக பார்க்க முடிந்தது.
முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய என்னுடைய சொந்த கிராமங்களில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தே என்னுடைய பிள்ளைகளை நிறுத்தியிருந்தேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க-வினர் வெளிப்படையாக கூட்டணி குறித்து பேசக்கூடாது என்ற அ.தி.மு.க தலைமையின் மறைமுக கோரிக்கையையும் மீறி அமைச்சர் இப்படி பேசியிருப்பது அ.தி.மு.கவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!