Tamilnadu
நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட 'துக்ளக்' சோ : நடந்தது என்ன? - மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பேட்டி!
துக்ளக் 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாடு குறித்து பேசினார். அப்போது, பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் ராமர் அவமதிக்கப்பட்டதாக சோ ராமசாமி தனது துக்ளக் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார் என்றும் பேசினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர், அரசியல் கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும், இதை நான் சொல்லவில்லை அவுட்லுக் கட்டுரையே சொல்கிறது என்றும் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரஜினி.
இந்நிலையில், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பேரணி தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் பெரியார் மீது ஜனசங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் பெரியாருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, பெரியார் மீதான ஜனசங்க வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்துள்ள பேட்டியில், “பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் துக்ளக் சோ-வை சாட்சியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரை நான்தான் குறுக்கு விசாரணை செய்தேன்.
அப்போது சோ, எனக்கு சொல்லப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டுதான் துக்ளக் பத்திரிகையில் எழுதினேன். மற்றபடி நேரடியாக அந்த நிகழ்வு பற்றி தனக்குத் தெரியாது என்றும் பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பான விசாரணை முடிந்தபிறகு நீதிபதிகள், பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆதாரம் எதுவும் இல்லை. பேரணியில் உருவப்படம்தான் கொண்டு வந்தார்கள். முன்பகை காரணமாக ராமர் உருவப் படத்தின் மீது செருப்பை வீசவில்லை. அதனால் இதைக் குற்றமாக கருத முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பான விசாரணையின் போது காலை 11 முதல் 2 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரைக்கும் சோ-வை தான் குறுக்கு விசாரணை செய்ததாகவும், இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணத்தில் உள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே 1971-ம் ஆண்டு பேரணி நடந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்திலேயே இல்லை எனவும், துக்ளக் இதழில் மட்டுமே வெளியான செய்தியை வைத்து நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவலை தெரிவிப்பதாகவும் அந்த பேரணியின்போது செய்தி சேகரிக்கச் சென்ற அப்போதைய செய்தியாளர் திருவேங்கடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!