Tamilnadu
நடைமுறைக்கு வராதபோதே ‘FasTag' கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடி : தட்டிக்கேட்டவர்கள் மீது சரமாரி தாக்குதல்!
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ‘ஃபாஸ்டேக்’ என்ற மின்னணு முறையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை ஜனவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில், பல இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்கள் இப்போது இருந்தே ‘ஃபாஸ்டேக்’ கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சிலர் வாடகை வேன் மூலம் சபரிமலைக்கு சென்று திரும்பி வந்துள்ளனர். அப்போது மதுரை நோக்கி வந்த வாகனம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளது.
கூட்டம் அதிகமானதால் நீண்டநேரம் வாகனத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது முதல் பாதையில் வாகனம் எதுவும் இல்லாததால் அதில் சென்றுள்ளனர். அப்போது இது ஃபாஸ்டேக் பாதை என்றும் அந்தப் பாதை வழியாக வந்ததால், இருமடங்கு பணம் அதிகம் தரவேண்டும் எனவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டுள்ளனர்.
கூட்டம் அதிகமானதால் தான் இந்தப் பாதையில் செல்லவேண்டியிருந்தது என வேன் ஓட்டுநர் பதில் கூறிவிட்டு, நாங்கள் அந்தப் பாதையிலேயே செல்கிறோம் எனக் கூறி வாகனத்தை பின்னால் எடுத்துள்ளார் ஓட்டுநர்.
அப்போது வாகனத்தை சுற்றி இருந்த சில சுங்கச் சாவடி ஊழியர்கள் கைகளால் ஓங்கி வாகனத்தைத் தட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கோபமுற்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி 15ம் தேதி முதல் தான் இந்த ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது. அதற்குள் இப்போதே கட்டணம் வசூலிக்கிறீர்கள், இது எப்படி நியாயமாகும் எனக் கேட்டுள்ளனர். முறையாக பதில் கூறாத ஊழியர்கள் கட்டணம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுக்கும்படி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சுங்கச் சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச் சாவடி ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த சக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!