Tamilnadu
டெண்டர் முறைகேடு வழக்கு : பிரதிவாதியாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு!
சென்னையில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்கு 590 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், 300 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், 290 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் கடந்த 2018ம் ஆண்டு கோரப்பட்டன.
இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளதாகவும், சில ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி, 2018 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்தப் புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதது குறித்தும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கும் புகார் அளித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக, 2019 மார்ச் மாதம் ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டு, டி.எஸ்.பி சங்கர் தலைமையில் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும், மனுவுக்கு பதிலளிக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பிய புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால் அவரை வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க அறப்போர் இயக்கம் தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?