Tamilnadu

ஓ.பி.எஸ்ஸுக்கு அளிக்கப்பட்டுவந்த ‘Y பிரிவு’ பாதுகாப்பு வாபஸ் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பை நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியது தொடங்கி கடந்த 2017ம் ஆண்டு முதல் அவருக்கு 8 துப்பாக்கிகள் ஏந்திய மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

2 ஆண்டுகளாக ஓ.பி.எஸுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த பாதுகாப்பு நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக சி.ஆர்.பி.எஃப் தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

அதில், மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது, யார் யாருக்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தவேண்டும் மற்றும் எவருடைய பாதுகாப்பெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆலோசனையில் நீக்கப்பட வேண்டிய பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்படி, நாளை (ஜன.,10) முதல் ஓ.பி.எஸ்ஸுக்கான Y பிரிவு பாதுகாப்பு நீக்கப்படுவதாக சி.ஆர்.பி.எஃபின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்ற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மட்டுமே இதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அளிக்கப்பட உள்ளது.

ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சர் பதவியில் இருப்பவருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு என்பது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு திடீரென ஓ.பி.எஸ்ஸுக்கான பாதுகாப்பை நீக்கியுள்ளது அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான பாதுகாப்பை மோடி அரசு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: "நீட் தேர்வு திணிப்புக்கு காரணம் அ.தி.மு.க அரசு தான்” - விஜயபாஸ்கருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி!