Tamilnadu

தமிழகத்தின் பா.ஜ.க வளர்வதற்கும், நீடிப்பதற்கும் வாய்ப்பே இல்லை - கே.எஸ்.அழகிரி தாக்கு!

உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் நின்றதால் தான், பாமக அதிக இடங்களை வென்றது. இதற்காக ஒரு கட்சி மூன்றாவது இடம் என பெருமை பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்தித்து பேசினார்.

அப்போது, நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பஞ்சாயத்து யூனியனில் 29% வெற்றியையும், மாவட்ட பஞ்சாயத்தில் 21% சதவீத வெற்றியையும் பெற்றுள்ளது.

ஆளும் கட்சி பணபலத்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. பண பலம் அதிகார பலத்தை மீறி மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் இந்த வெற்றியை பெற்று உள்ளோம். வாக்களித்த மக்களுக்கு நன்றி.

ஆரம்பத்தில் இருந்து தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளுக்கு எதிராகவே செயல்பட்டது. நீதிமன்றம் சென்றது தேர்தலை நிறுத்த அல்ல. நியாயமான தேர்தலை நடத்ததான். கரூர், சேலம் போன்ற மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை.

இன்னும் அதிகமாக வெற்றி பெற எங்களுக்கு வாய்ப்பு இருந்தாலும் ஆளும் கட்சியின் பண பலத்தால் நாங்கள் ஒரு சில இடத்தில் தோற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் எங்களை விட அதிக இடங்களில் நின்றதால் தான், பா.ம.க அதிக இடங்களை வென்றது. இதற்காக ஒரு கட்சி மூன்றாவது இடம் என பெருமை பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கான வேர் எல்லோரை காட்டிலும் பலமானது.

அதேபோல், தற்செயலாக கன்னியாகுமரியில் பா.ஜ.கவுக்கு சில இடங்கள் கிடைத்துள்ளது. அதனால் தமிழக மண்ணில் பா.ஜ.க வளர்ப்பதற்கும் நீடித்து நிற்பதற்கும் வாய்ப்பு இல்லை. அரசியல் காரணம் மட்டுமின்றி மக்கள் கொள்கை ரீதியாகவே பா.ஜ.கவை எதிர்க்கிறார்கள்.

நெல்லை கண்ணன் திட்டமிட்டு வேண்டுமென்று பேசவில்லை. அதற்காக 13 நாட்கள் அவரை காவலில் வைப்பது நியாயம் இல்லை. ராஜிவ் காந்தியை கொன்றது நாங்கள் தான் என சீமான் கூறியபோது அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லை.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம். மோடி பொறுப்பற்று பேசுகிறார். கோலம் போடுவது தவறா? கோலம் போட்டதிற்கு பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், நாடு எதை நோக்கிப் போகிறது?” என கே.எஸ்.அழகிரி பேசினார்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: தி.மு.க கூட்டணி கட்சிகளின் மாவட்ட வாரியான வெற்றி நிலவரம்!