Tamilnadu

சந்தியா 21..வீரம்மாள் 79..சரஸ்வதி ’துப்புரவு தொழிலாளி’: வயதோ, தொழிலோ தடையில்லை- சாதித்த ‘சிங்கப் பெண்கள்’

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க அ.தி.மு.க.,வினர் பல்வேறு அட்டூழியங்கள், அத்துமீறல்கள், முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முன்னிலை வகித்தும், வெற்றி பெற்றும் வருகின்றனர்.

Also Read: #LIVE Results : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றி!- முழுமையான தகவல்கள்!

அதிலும் குறிப்பாக, இதுவரை இல்லாத அளவிற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. அதேநேரம், விடாமுயற்சி செய்து பல்வேறு இடங்களில் மூத்தோர்களும் வெற்றி பெற்று உள்ளனர்.

அதில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தின் 2வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது மாணவி, சந்தியா என்ற கல்லூரி மாணவி 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிட்ட வீரம்மாள் என்ற 79 வயதுடைய மூதாட்டி வெற்றி வாகையைச் சூடியுள்ளார். ஏற்கெனவே இருமுறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள வீரம்மாள் இம்முறையை வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

தள்ளாடும் வயதிலும் மக்களுக்காக தன்னால் பணியாற்ற முடியும் என்ற இவரது நம்பிக்கை இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த சரஸ்வதி என்ற பெண்மணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிக்கனியை சுவைத்துள்ளார்.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதே நிலையில் உள்ளவர்களே தலைவர்களாக முன்னின்று அவர்களை வழிநடத்திச் செல்பவராக சரஸ்வதி உருவெடுத்துள்ளார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலை எப்படியாவது தடுத்த நிறுத்த பா.ஜ.க அரசுக்கு அடிமை சேவகம் செய்யும் எடப்பாடி தலைமையிலான அடிமை அரசு நினைத்தாலும், மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் அறிவும் தெளிவும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இப்போது வரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தி வருகின்றன.

அந்த வகையில், தி.மு.க வேட்பாளர்களுக்கும், தங்கள் நம்பிக்கை வைத்துள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தியா, ரியா, சரஸ்வதி, வீரம்மாள் போன்ற பெண்களின் வெற்றி ஒட்டுமொத்த பெண்கள் சமுதாயத்திற்கே பெருமையைத் தேடித் தந்துள்ளது.

‘பெண்களை அரசியல்படுத்துங்கள்.. புரட்சி தானாய் நிகழும்’ என்கிற வாசகம் தமிழ் மண்ணில் நிரூபணம் ஆகியுள்ளது. அதேபோல், பல்வேறு இடங்களில் பட்டதாரி இளைஞர்களும் வெற்றிவாகை சூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.