Tamilnadu

“பொங்கல் விடுமுறை தினத்தில் மோடி உரை - மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு” : பா.ஜ.க அரசு சூழ்ச்சி திட்டம்?

ஆண்டுதோறும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி 14-ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17-ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில், ”ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும்.

பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும்.” என கூறப்பட்டிருந்தது.

மேலும், அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் பள்ளிகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் இந்த திடீர் உத்தரவு மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பிற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை சீர்குழைக்கும் முயற்சி, பா.ஜ.க அரசின் சூழ்ச்சியை தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் புரிந்துள்ள கொள்ளவேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த தொடர் எதிர்ப்புகளினால், பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், பிரதமர் மோடியின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என வெளியான தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இதுபோல மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அறிக்கை அனுப்பியது யார்? அமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் அறிக்கை பள்ளிகளுக்குச் சென்றுள்ளதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.