Tamilnadu

“தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்க “எடுபிடி”அரசு மூலம் பா.ஜ.க முயற்சி” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

பிரதமர் ஆற்றும் உரையைக் கேட்பதற்காக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 16.1.2020 அன்று பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால், தி.மு.க மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும்” என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பா.ஜ.க. அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று “எடுபிடி”அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.

பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் மனமகிழ்ச்சியையும் கெடுக்கும் உள்நோக்கத்திலிருந்து இன்னும் பா.ஜ.க. அரசு விடுபடவில்லை என்பதும் - அதற்கு இங்குள்ள அ.தி.மு.க அரசும், எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுவதைப் போல, இதற்கும் துணை போவதும் வெட்கக்கேடானது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும் பா.ஜ.க.வின் “கொள்கைப் பரப்புச் செயலாளர்களாகி” இப்படி மாணவ மாணவிகள் மத்தியில் “கல்வியைக் காவி மயமாக்கவும்” “தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்கவும்” வழிவகுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அதிலும் “இந்த உரையைக் கேட்பதற்காக பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வெர்ட்டர்கள் மூலம் மின்னூட்டம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கட்டாயப் படுத்தியிருப்பது, பா.ஜ.க.வின் பிரச்சாரத்திற்காக அரசுப் பணத்தைச் செலவழிப்பது உட்பட, எதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்பது தெரியவருகிறது.

அரசுத் தேர்வுகள் குறித்துத்தான் பிரதமர் அவர்கள் உரை நிகழ்த்துகிறார் என்றால் அதை மாணவ மாணவிகள் கேட்பதற்கு - மனிதவள மேம்பாட்டுத்துறையே கூறியிருப்பது போல், தகவல் தொழில் நுட்பத்தில் நேரலைத் தளங்கள் இருக்கின்றன. அவற்றை மாணவ, மாணவிகள் விரும்பினால் தங்களின் இல்லங்களில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும்.

Also Read: “பொங்கல் விடுமுறை தினத்தில் மோடி உரை - மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு” : பா.ஜ.க அரசு சூழ்ச்சி திட்டம்?

அதற்காக அவர்கள் பொங்கல் விழாவை விட்டு விட்டு, பள்ளிக்கு வர வேண்டியதில்லை. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் இந்த உத்தரவு பா.ஜ.க.வின் பிரச்சாரத்திற்காக பள்ளிக்கூடங்களைப் பயன்படுத்தவும், இளைஞர்களின் உள்ளங்களைத் திசைதிருப்பும் எண்ணத்துடனும் போடப்பட்டுள்ள உத்தரவாகும்.

ஆகவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 16.1.2020 அன்று பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற நிர்வாக நடைமுறைகளுக்கு எதிரான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கண்டனங்களுக்கு, பயந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அப்படி இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் பின்வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.