Tamilnadu

“பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வெறுப்பு அரசியலில் ஈடுபடுகிறது பா.ஜ.க” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை மட்டுமே மோடி அரசு கருத்தில் கொள்வதே பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என குற்றஞ்சாட்டி வி.சி.க. தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், “இந்தியப் பொருளாதாரம் சரிவில் சென்றுகொண்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% ஆக குறைந்திருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் (INTERNATIONAL MONETARY FUNDS) அறிவித்துள்ளது. மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி சீராக்குவதற்கு உடனடியாக அரசு கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி 189 நாடுகளை உறுப்புநாடுகளாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச செலாவணி நிதியம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பொருளாதார வல்லுநர்களால் கருதப்படுகிறது.

பொருளாதார வீழ்ச்சியைப் பொருளாதார வல்லுனர்கள் மட்டுமல்ல மக்களும் நடைமுறையில் உணர்ந்துவருகிறார்கள். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே காய்கறி விலை விண்ணைத் தொட்டிருப்பதும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாமல் மக்கள் அல்லல்படுவதும் நாட்டின் பொருளாதாரம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

‘பண மதிப்பு நீக்க’ நடவடிக்கை ஒரு பொருளாதார அவசர நிலை என அன்றே சுட்டிக்காட்டினோம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையினாலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பினாலும் சிறுதொழில் நிறுவனங்கள் சிறுவணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது, நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள், மோடி அரசின் பொருளாதார கொள்கை படுதோல்வியை சந்தித்திருக்கிறது என கடந்த சில ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறோம்.

இந்திய மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொள்ளாமல் கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை மையமாகக் கொண்டே மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை வரையறுக்கப்படுவது தான் இன்றைய பொருளாதார நலிவுக்கு முக்கிய காரணம்.

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் முஸ்லிம் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து பொருளாதார வீழ்ச்சியைத் திசைதிருப்ப மோடி அரசு முயற்சிக்கிறது.

மத்திய அரசு பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மக்கள் நலனை மையமாகக்கொண்டு உடனடியாக கொள்கை முடிவுகளையும் திட்டங்களையும் வகுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “நல்லாட்சிக்கான முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல்; களத்தில் வென்று காட்டுவோம்” -தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!