Tamilnadu

வாக்காளர்களுக்கு வழங்க பரிசுப்பொருளுடன் சென்ற அ.தி.மு.கவினரின் வாகனம் பறிமுதல்; திருவள்ளூரில் அதிரடி!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை மறுநாள் (டிச.,27) நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவாலங்காடு அடுத்த பழையனூர் 12வது வார்டு ஒன்றிய அ.தி.மு.க வேட்பாளராக ஜீவா போட்டியிடுகிறார். இவரது கணவர் விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். மணவூர் அருகே அ.தி.மு.க கொடி கட்டிய வாகனத்தில் பொருட்கள் ஏற்றி வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது, அதில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக குங்குமச் சிமிழ், சேலைகள், உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஆளுங்கட்சியினர் இதேபோல முறைகேடுகளில் ஈடுபட்டு பின் வாசல் வழியாகவே ஆட்சியை தக்க வைக்கும் செயல்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், உள்ளாட்சித் தேர்தலை எந்த வித ஊழலும் இல்லாமல் நேர்மையாக நடத்தவேண்டும் எனவும், முறைகேடுகளை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.