Tamilnadu
முகமூடி, சுவரில் துளை: திருச்சி கொள்ளை ஃபார்முலாவை கையிலெடுத்த அரியலூர் கொள்ளை கும்பல்- வலைவீசும் போலிஸ்!
திருச்சியில் உள்ள லலிதா நகைக்கடையில் அண்மையில் நடந்த கொள்ளைச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அங்கு கொள்ளையடிப்பதற்காக முருகனின் கொள்ளைக்கூட்டம் தீட்டிய திட்டங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முருகனின் திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு அரியலூரில் உள்ள அடகுக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளைக் கும்பலுக்கு போலிஸ் வலை வீசி வருகிறது.
கரூர் மலைக்கோவிலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அரியலூர் ஆண்டிமடம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். எப்போதும் போல நேற்று இரவும் கடையை அடைத்துவிட்டு ராமலிங்கம் சென்ற பிறகு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லலிதா ஜுவல்லரியின் சுவரை இடித்து முருகனும் அவனது கும்பலும் உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்டது போல, முகமூடி அணிந்துகொண்டு ராமலிங்கத்தின் அடகுக்கடையின் பின்பக்க சுவரை இடிக்க தொடங்கியுள்ளது மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல்.
அப்போது, அடகுக்கடைக்கு அருகே வசிக்கும் மோகன் என்பவர் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கொள்ளையர்கள் சுவரை இடிப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அவரைக் கண்ட கொள்ளையர்கள் மூவரும் மோகன் மீது கற்களை வீசிவிட்டுத் தப்பித்துவிட்டனர்.
இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கேமிராவின் மீது சூயிங்கம்மை (chewing gum) ஒட்டிவைத்துவிட்டு அடகுக்கடையின் சுவரை இடிக்க முற்பட்டது தெரியவந்தது. அதன் பிறகு போலிஸில் புகாரளிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அடகுக்கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளும், பணமும் கொள்ளை போகாமல் இருந்துள்ளன.
இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தை யூடியூபில் பார்த்து அதேபோன்று முகமூடி அணிந்து, சிசிடிவியில் சூயிங்கம்மை ஒட்டவைத்து, உடலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு, சுவரை இடித்து கொள்ளையில் ஈடுபட கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும், விரைவில் கொள்ளைக் கும்பலை பிடித்து விடுவோம் என்றும் போலிஸ் தரப்பு கூறியுள்ளது. இரவு நேரத்தில் அடகுக்கடையின் சுவரை இடித்தும் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!