Tamilnadu

#CAA - “துரோகம் இழைத்தவர்கள் வாக்கு கேட்க வருவதா?”: அமைச்சர் உதயகுமார் பிரசாரத்திற்கு கடும் எதிர்ப்பு!

குடியுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அ.தி.மு.க மற்றும் பா.ம.க மிக முக்கியக் காரணம். குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வாக்களித்தனர்.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் ஆபத்து என்று தெரிந்தும், கூட்டணி தர்மத்திற்காக அ.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகியவை குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். இந்த கட்சிகளின் நடவடிக்கை இஸ்லாமிய மக்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பெரும்பாலன இடங்களில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மேலும் சில இடங்களில் அ.தி.மு.க-வினரை ஊருக்குள் விடாமால் விரட்டி அடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில், நேற்றைய தினம் மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அமைச்சருடன், அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் தேனூர் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பள்ளிவாசல் பகுதியில் வாக்குசேகரிக்க வந்த போது, அங்கு திரண்டு வந்த இஸ்லாமியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திடீரென கருப்பு குடைகளை விரித்துக் காட்டி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.விற்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து அமைச்சரும், அ.தி.மு.க-வினரும் அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.