Tamilnadu
உள்ளாட்சி தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்த மாநில தேர்தல் ஆணையர் - உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட்டதா?
தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 6ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறாததால் பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் கடுமையாகச் சாடிய நீதிபதிகள் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட்டு, முழுமையாக இட ஒதுக்கீடு, மறுவரையறை பணிகள் முடிந்தபின்னர் தேர்தலை அறிவிக்க வேண்டுமெனவும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு பின்னர் தேர்தல் நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, “டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
மேலும், “காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும் எனவும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும்” எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி பணிகள் முடிக்கப்பட்ட பின்னரே தேர்தலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிறிது நேரத்திலேயே புதிய தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!