Tamilnadu
“வீட்டு முன்னாடி வந்தா நாயை அவுத்துவிட்ருவேன் என மிரட்டினார்”- தீண்டாமை சுவர் குறித்த LIVE ரிப்போர்ட்!
மேட்டுப்பாளையம் நடூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் வரிசையாக அமைந்திருந்த வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டின் சுற்றுச்சுவர் அதிக உயரத்தில், கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
அந்தத் ‘தீண்டாமை’ சுவரைக் கட்டும்போதே அப்பகுதி மக்கள் இவ்வளவு உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து அரசு அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்ட சுவர், வீடுகளின் மேல் விழுந்து தரைமட்டமாக்கியது. இதனால் அதில் உறங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
17 மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தது காவல்துறை. அதிகார பலமிக்கவர்களின் ஏவலாளாகச் செயல்படும் காவல்துறைக்கும், அதிகாரிகளுக்கும் உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் அவலநிலை தெரிய வாய்ப்பில்லை. இதுகுறித்து, நேரடிக் காட்சிகளை ஃபேஸ்புக்கில் அ.கரீம் என்பவர் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு பின்வருமாறு :
பத்தடி நீளமுள்ள இரண்டடி அகலமுள்ள நீண்ட கல் விழுந்தால் என்னாகும் என்பதற்கு படத்தில் இருக்கும் பீரோவே சான்று. தகரமே இப்படி சிதைந்து போனால் உடல்கள் என்னாகும் மண்ணோடு நசுங்கித்தான் போகும். இந்த இரண்டு படங்களை உற்று நோக்கினாலே தெரியும் விபத்தின் கொடூரம்.
ஒரே குடும்பத்தில் தம்பி, இரண்டு தங்கைகள், அம்மா, பாட்டி என் ஐந்து பேரை வாரிக் கொடுத்தவருக்கு மிஞ்சியது வெறும் புகைப்படங்களே. அவர்களின் புகைப்படங்களை கடந்த நான்கு நாட்களாக தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டே கௌதமன் அழுகிறான்.
"எங்கள் வீட்டின் மீதுதான் அவர்களது செப்டிக் டேங்க் குழாய் நீட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து வழிந்தே எங்கள் சுவரும் ஈரமாகிக்கொண்டு இருக்கும். போன மாதம் கூட அதனை அகற்றச் சொல்லி எனது அப்பாவும் தங்கையும் அந்த வீட்டுக்காரரிடம் கேட்டார்கள் "வீட்டு முன்னாடி வந்தீனா நாயை அவுத்து விட்ருவேன்" என அவர் மிரட்டினார் எனச் சொல்லி அழுகிறான்.
இந்திய சமூகத்தில் சாதிய மனநிலை மனிதத் தன்மையற்ற மிருகமாக மாற்றுவதை அவனது நீண்ட பேச்சு உணர்த்தும்.
அங்கு கட்டியிருந்த ஆர்.சி கட்டிடம் அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய்விட்டது. ஆர்.சி கட்டிடமே புதையுண்டால் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் நிலை சொல்லவே தேவையில்லை.
"அந்தக்கா கட்டிட வேலைக்குப் போய் சிறுகச்சிறுக காசு சேர்த்து ரெண்டு புள்ளைங்களோட கல்யாணத்துக்கு ஏழு பவுன் நகை தீபாவளிக்கு தான் வாங்கினாங்க; பொருளும் போச்சு புள்ளையும் போச்சு" என்று அருகில் வசிக்கும் பெண்மணி சொல்கிறார்.
அந்த இரண்டு பெண் குழந்தைகளின் கண்களைத்தான் அவர்களது அப்பா தானமாகக் கொடுத்தார். “என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்துகோனுதான் சொன்னோம்; போலிஸ் தான் அவசர அவசரமாக எரிச்சிட்டாங்க” என்று அந்தக் குடியிருப்புவாசி ஒருவர் சொல்கிறார்.
உடைந்து நொறுங்கிய பீரோவில் அஜித் படமும் விஜய் படமும் ஒட்டப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் இரண்டு பெரிய கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருந்துள்ளனர். சமூக இழிவிற்கான போராட்டத்தை எந்தக் கதாநாயகனும் வந்து தீர்க்கப் போவதில்லை. இந்தக் கொடுமையை எந்தக் கதாநாயகனும் வந்து பார்க்கவுமில்லை; காரணம் அவர்கள் அருந்ததியர்கள்.
- அ.கரீம்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?