Tamilnadu

மத்திய அரசின் நிர்பயா நிதியை பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த தமிழக அரசு : அதிர்ச்சித் தகவல்!

பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு பெறாமல் இருப்பது அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி (நிர்பயா) கடந்த 2013ம் ஆண்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

இதிலிருந்து ஆண்டுதோறும் 1000 கோடி நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்து வந்தது. இந்த நிதியில் இருந்து இதுவரை தமிழக அரசுக்கு 198 கோடியே 68 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசோ இதிலிருந்து 6 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி பொறுத்துவது, தெருக்களில் அவசர தொலைபேசி நிலையங்கள் அமைப்பது போன்ற திட்டங்கள் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டள்ளன.

மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை அனுப்பி வைக்குமாறு 2013ம் ஆண்டே மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு 5 ஆண்டுகள் கழித்துதான் தமிழக அரசு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க ‘நிர்பயா நிதி’யிலிருந்து வெறும் 20% தொகை மட்டுமே செலவு!