Tamilnadu

ஐஐடி மாணவி ஃபாத்திமா மொபைலில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையா? - தடயவியல் ஆய்வறிக்கையில் தகவல்!

சென்னை ஐ.ஐ.டி-யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த மாதம் 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் பேராசிரியர்கள் துன்புறுத்தல் தான் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு தற்கொலைக் குறிப்பு ஒன்றை தனது செல்போனில் பதிவிட்டு இருந்தார்.

ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரித்து வந்த நிலையில், மாணவியின் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி தடயங்களை சேகரிக்க வேண்டும் என கடந்த வாரம் மாணவியின் பெற்றோர்கள் முன்னிலையில் செல்போனை தடவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தடயவியல் துறை முதற்கட்ட ஆய்வறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு வழங்கியுள்ளது. அதில் செல்போனில் உள்ள தற்கொலை குறிப்பு பொய்யானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக் குறிப்பு போலி எனப் பலரால் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது போலியானது இல்லை என்று தடயவியல் துறை தெரிவித்திருப்பது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனையடுத்து, மாணவியின் தற்கொலை தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மாணவி ஃபாத்திமா ’மர்ம’ மரணம் : சுதர்சன் பத்மநாபன் உட்பட ஐ.ஐ.டி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் !