Tamilnadu
“இந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் மலிவானதா?” - கி.வீரமணி கண்டனம்!
மேட்டுப்பாளையம் கோரச் சம்பவத்திற்கு சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் பொறுப்பா, புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் பொறுப்பா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டுப்பாளையத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் (1.12.2019) இரவு 18 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 15 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட அந்தச் சுவர் அருகில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சுவர் பலவீனமாக உள்ளது என ஏற்கெனவே புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். சம்பவத்தன்று பெய்த பெருமழையால் சுவர் விழுந்து வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அருக்காணி, சிவகாசி ஆகிய இருவரது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த அனைவருமே இறந்தனர். இறந்தவர்களில் இரு பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர்.
அதிகாலையில் இந்த விபத்து நடந்த செய்தி அறிந்தவுடன் அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இறந்த 17 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
திராவிடர் கழகம் சார்பாக மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுசாமி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரங்கசாமி மற்றும் தோழர்கள் விபத்து நடந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர், டிஐஜி பெரியய்யா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கட்டட உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது வழக்கு பதிந்துள்ளனர். கட்டட உரிமையாளரை கைது செய்யக் கோரியும், புதியதாக வீடு கட்டி தர வேண்டியும், அரசு அறிவித்த நிவாரணத் தொகையை அதிகப்படுத்தக்கோரியும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் அரசு மருத்துவமனை முன்பு மறியல் செய்தனர். மறியலின் போது காவல்துறை தடியடி நடத்தி 80க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
மக்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்து (ரிமாண்ட் செய்து) வழக்கும் தொடுத்துள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த ஆட்சியில் மனித உடல்கள் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் என்றால் மிகவும் மலிவானதுதானா?
மழையால் இடிந்து விழுந்துள்ள - ஆபத்தான நிலையில் இருந்த சுவர் பற்றி ஏற்கெனவே புகார் கூறியிருந்தும், அரசின் அலட்சியப் புத்தி காரணமாக இந்தச் சோகம் நடந்திருக்கிறது.
இதற்கு யார் பொறுப்பு? வீட்டின் சொந்தக்காரரா? புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காத அரசின் அதிகாரிகளா?
இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு என்பது ஒரு வகையான நிவாரணம் தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இந்தப் பணத்தால் இழக்கப்பட்ட உயிர்களை மீட்க முடியுமா?
பள்ளிகள் இடிந்து விழுவது, அடுக்கு மாடிக் கட்டடங்கள் இடிந்து வீழ்வதால் தொழிலாளிகள் மரணம் என்பதெல்லாம் இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறதே - மக்கள் நல அரசு என்பதற்கு தகுதியானதுதானா?
இதில் என்ன கொடுமை என்றால், இடிந்து விழுந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை. ஏற்பட்ட கொடூரத்தைக் கண்டித்து போராடிய தோழர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த நடவடிக்கை மூலம் தமிழ்நாடு அரசு யாருக்கான அரசு என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் பணம் மட்டுமல்ல - வீடுகள் கட்டிக் கொடுப்பது, சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளுக்குக் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளைக் காலந் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றுள்ள இத்தகு அவலம் வேறு எங்கும் நடைபெறாமல் முன்கூட்டியே உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!