Tamilnadu

கல்வி நிலையங்களில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி, லலிதா பிரியா தம்பதியர். இவர்களது மகள் மைதிலி, திருவாரூர் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

விடுதியில் தங்கியிந்த மாணவி மைதிலி நேற்று முன்தினம் இரவு சாப்பிட சக மாணவிகள் அழைத்தபோது சொல்லாமல் விடுதியிலேயே தங்கியுள்ளார். மாணவிகள் அனைவரும் சாப்பிட்டு வந்தபிறகு, மைதிலி அறையின் கதவுகள் உள்பக்கம் பூட்டியிருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக விடுதி மாணவிகள் நீண்ட நேரம் தட்டியும் கதவுகளை மைதிலி திறக்கததால் விடுதி காப்பாளருக்கு ராஜி தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பணியாளர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அறையில் இருந்த மின் விசிறியில், சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு மைதிலி இறந்துகிடந்தார்.

இதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நன்னிலம் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலிஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவி அறையில் தங்கி படித்துவந்த சகமாணவி ஒருவர் கூறுகையில், “அவள் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். நன்றாக படிக்கும் மாணவிதான். எங்களது அறையில் நாங்கள் 4 பேர் தான். இரண்டு மாணவிக்கள் ஊருக்குச் சென்றிருந்தனர்.

அன்று இரவு 9 மணியளவில் சாப்பிட கேன்டீனுக்கு அழைத்தேன். நீ முதலில் செல், சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறினார். சாப்பிட்டுவிட்டு 9.30 மணியளவில் திரும்பியபோது கதவு பூட்டியிருந்து. பின்னர் தான் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தோம். அவள் ஏதோ மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்” என அவர் தெரிவித்தார்

மேலும் மாணவிகள் கொடுக்கும் தகவலின்பேரில் போலிஸார் விசாரணை நடத்தினால்தான் உண்மை காரணம் தெரியவரும் என கல்லூரி மாணவிகள் கருதுகின்றனர். விடுதி அறையில் மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.