Tamilnadu

“உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை அணுகுவோம்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நிறுத்துவதாக அ.தி.மு.கவினர் வேண்டுமென்றே எங்கள் மீது பொய்ப் புகார்களை கூறி வருகின்றனர் என்றும், உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை அனுகுவோம் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “வேண்டுமென்றே திட்டமிட்டு, வேறு வழியின்றி ஆளும் அ.தி.மு.க அரசும், மாநில தேர்தல் ஆணையமும் இந்த உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளனர். இதுவரை மறுவரையறை முழுமை பெறவில்லை.

இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை. ஆனால் அ.தி.மு.கவினர் எங்கள் மீது வேண்டுமென்றே பொய் புகார்களைக் கூறி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்” எனத் தெரிவித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சார்பாக அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர், தி.மு.க தலைவர் முக.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

Also Read: “மழையால் பாதிப்பு : போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!