Tamilnadu

“என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்” - பிரதமருக்கு கடிதம் எழுதிய நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத் தீர்மானம் அனுப்பி ஓராண்டாகியும் இன்னும் அதன் மேல் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் இதுவரை எடுக்கவில்லை.

இந்நிலையில், தன்னை கருணைக் கொலை செய்யுமாறு பிரதமருக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினி கடிதம் எழுதியுள்ளார்.

தன்னை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் முதல் நளினி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நேற்று தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு பிரதமர் மோடிக்கு நளினி கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், அதனை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழக சிறையில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தன்னையும், கணவர் முருகனையும் கர்நாடக மாநில சிறைக்கு மாற்றுமாறு உள்துறை செயலருக்கு நளினி மனு அளித்துள்ளார்.

பிரதமர், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில், 28 ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்துவிட்டதாகவும், விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடியும் விடுதலை கிடைக்காத விரக்தியில் இருப்பதாகவும், ஆதலால் தம்மை கருணை கொலை செய்துவிடுங்கள் என எழுதியுள்ளார் '' எனத் தெரிவித்தார்.

Also Read: நளினிக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல்: எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அதிமுக!

சமீபத்தில் தான் மகளின் திருமணத்திற்காக ஒரு மாதம் நளினி பரோலில் வந்து சென்றார். அப்போது பரோலை நீட்டிக்கக்கோரி நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். அவருக்கு பரோலை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.