Tamilnadu

9 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவர் நிலத்தை விற்றதாக போலி பத்திரப்பதிவு - மோசடியில் அரசு அதிகாரிகள் கூட்டு!

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி துரைராஜாபுரத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - ராமுத்தாய் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள், 5மகன்கள் உள்ளனர். ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால் நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் அளிக்கும் திட்டம் படி தமிழக அரசு 1977-ம் ஆண்டு பூதிப்புரம் பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தை பழனிசமிக்கு வழங்கியது.

கூலி வேலை செய்துவந்த பழனிசாமி கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் தந்தை இறப்பிற்கு பிறகு நிலத்தை மகன் பெயருக்கு பட்டா மாற்ற குடும்பத்தினர் வில்லங்க சான்றிதழ் பெற முயற்சித்துள்ளனர். அப்போது பழனிசாமிக்கு உரிமையான இடம் தேனியைச் சேர்ந்த நிலப் பிரோக்கர் மலைச்சாமி என்பவரின் பெயரில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் மலைச்சாமி பெயரில் இருக்கும் பத்திரங்களைக் கண்டுள்ளனர். அதில், 2010-ம் ஆண்டு உயிரிழந்த பழனிசாமி 2017-ம் ஆண்டு மலைச்சாமிக்கு பத்திரப்பதிவு செய்துக்கொடுத்தகாக இருந்துள்ளது.

மேலும் அதில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம், பழனிசாமியின் புகைப்படம் இல்லை. வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து போலியாக பத்திரப் பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது.

பழனிசாமியின் மகன்

இதனையடுத்து பழனிசாமி குடும்பத்தினர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்த ஆகஸ்ட் 8-ம் தேதியிலுருந்து அடுத்த 5 நாட்களில் பழனிசாமி பதிவு செய்து கொடுத்ததாக பதிவு செய்த பத்திரம் ரத்து செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் பெயரில் போலி அடையாள அட்டை மற்றும் நிலத்தை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டவுடன் அவர்களை பாதுகாக்க முயற்சி நடப்பதாக பழனிசாமி குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், முறையாக ஆவணங்களுடன் புகார் அளித்து 3 மாதமாகியும் போலிஸார் நடவடிக்கை எடுக்காததும், இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் எதன் அடிப்படையில், பதிவு செய்தார் என்பது குறித்த பல சந்தேகங்கள் ஏற்படுவதுவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துவருகின்றனர்.