Tamilnadu

வெங்காயத்தின் விலை வரலாறு காணாத உயர்வு : அதிகரிக்கும் உணவுப்பண்டங்களின் விலை!

கடந்த சில வாரங்களாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால் வெங்காயப் பயிர்கள் அழிந்தன.

இதனால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மத்திய அரசு வெளிநாடுகளிடம் இருந்து வெங்காயம் வாங்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், தற்போது பெரிய வெங்காயத்தை அடுத்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 120 ரூபாயும், சின்ன வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய விலை அதிகரிப்பின் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிரியாணி உள்ளிட்ட உணவுப்பண்டங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. பிரியாணி தயாரிப்பில் வெங்காயம் அவசியம் என்பதால், பிரியாணி கடைக்காரர்கள் தவித்துப் போயுள்ளனர்.

இதனால் பிரியாணியின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளார்கள் கடைக்காரர்கள். மேலும், வெங்காயத்துடன் உள்ள ஆம்லெட்களுக்கு கூடுதல் விலை வைத்தும் கொடுக்கப்படுகிறது.

உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் இளைஞர்கள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் குறைந்த விலையில் தங்குதடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்யவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.