Tamilnadu
ஆவின் பாலில் அஃப்லாடாக்சின் M1 : அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்!
பால் மாதிரிகளில் அஃப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ''மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வணக்கம்.
"தனியார் பாலை விட ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரான பால்" என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரை பல்வேறு அமைச்சர் பெருமக்கள் பெருமையாக மார்தட்டிக் கொண்டும், இவர்களே சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் போன்றும் "தனியார் நிறுவனங்களின் பால் குறித்து ஆய்வு செய்யப்படும்" எனவும் ஊடகங்களில் அறிவித்து சான்றளித்து வருவதை தாங்கள் நன்கறிவீர்கள்.
அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சரான தாங்கள் பாலில் நச்சுத்தன்மை இருப்பதான மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை குறித்து மெளனம் காத்து வருவதோடு, அந்த நகைச்சுவை அமைச்சர்களின் நாடகங்களை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி தாய்ப்பாலுக்கு நிகரான பால் என அமைச்சர்களால் சான்றளிக்கப்பட்ட ஆவின் பாலில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் அஃப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை அதிகளவில் இருக்கிறது என எங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த தகவலை வெளியுலகிற்கு தெரியாமல் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதும் கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே குழந்தைகளுக்கு புற்றுநோய் வரக் காரணமே தனியார் பால் நிறுவனங்களின் பால் தான் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிசர்ச்சைக்குரிய வகையில் பேசி அந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் "அஃப்லாடாக்சின் எம்-1" என்கிற "நச்சுத்தன்மை" கலந்த, "கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் பால்" விற்பனையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை பொதுமக்கள் பால் குடிப்பதையே தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்ட பாலினை ஆய்வு செய்த ஆய்வறிக்கை முடிவை உடனடியாக வெளியிட உத்தரவிடுவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அனைத்து பால் பண்ணைகளில் இருந்தும் பால் மாதிரிகளை எடுத்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, அந்த ஆய்வறிக்கையில் அஃப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அதன் உண்மை நிலவரத்தை மக்களுக்கு ஒளிவு மறைவின்றி தெரிவிக்குமாறும், பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் என்கிற முறையில் தங்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!