File Image
Tamilnadu

"நிர்மலாதேவி மீது ஆசிட் வீசுவோம் என மிரட்டும் அ.தி.மு.க அமைச்சர்” - வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

பேராசிரியை நிர்மலாதேவி மீது ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர் மிரட்டுவதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழத்தது தொடர்பான வழக்கில், கடந்த 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலாதேவிக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய ஜாமினை ரத்து செய்து பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலிஸார் நிர்மலாதேவியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், தனது கட்சிக்காரரை ஒரு கடத்தல்காரர் போல் சிபிசிஐடி போலிஸார் மறைத்து ஆஜர்படுத்தியதாகவும் நேற்று இரவு தன்னிடம் பேசிய நிர்மலாதேவியை தான் இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து சரணடையுங்கள் என்று கூறிய நிலையில் தற்போது சிபிசிஐடி போலிஸார் அவரை நீதிமன்றம் வரும் வழியிலேயே கைது செய்து அழைத்து வந்தது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “நிர்மலாதேவி தன்னிடம் மதுரையைச் சேர்ந்த ஒரு அ.தி.மு.க அமைச்சர் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர் ஆனால் தனது குடும்பத்தை சீரழித்து விடுவதாகவும் தனது குழந்தைகளை கடத்திவிடுவதாகவும், தன் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாகவும் கூறி மிரட்டி வருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் இன்று ஆஜராக வந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த அந்த அமைச்சர் குறித்து கேட்டபோது, அந்த அமைச்சர் வருடத்தில் பாதிநாள் தாடி வைத்து சாமியாராக இருப்பதாகவும், மீதி நாட்களில் சாதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நிர்மலாதெவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.