Tamilnadu

’வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்யானந்தா’ : இரண்டு பெண் சீடர்கள் கைது - பரபரப்புத் தகவல்கள்!

பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான லோக முத்ரா (வயது 21), நந்திதா சர்மா (18) ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

தனது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டின் உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது அம்பலமானது.

இந்த நிலையில் ஆமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி.அசாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும்,தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இருவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

குஜராத் மாநில உள்துறை மந்திரி பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பவிட மாட்டோம் என்றார்.

இதற்கிடையே, நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்து உள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதே‌‌ஷ் புரியை போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.டி.கமாரியா தெரிவித்தார்.

நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடியதாக போலிஸார் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.