Tamilnadu

"சுயநலத்திற்காக பேருந்து நிலைய இடத்தை மாற்ற முயலும் அ.தி.மு.க அமைச்சர்” - செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கை எடுக்காததால் 1,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ“கரூர் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், 22 மாதங்களில் கரூர் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டவேண்டும் என்றும் உடனடியாக பணிகளை துவங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிட்ட 9 மாத காலமாகியும், ஆளுகின்ற எடப்பாடி அரசு, அதற்கான நிதி ஒதுக்காமல் பணி தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார்கள்.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கைத்தறி, டெக்ஸ்டைல், பஸ் பாடி கட்டுவது, உள்ளிட்ட மூன்று முக்கிய பிரதான தொழில் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையமாக விளங்கி கொண்டிருக்கிறது கரூர் பேருந்து நிலையம். மிகப்பெரிய கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு பேருந்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாணை வெளியிடப்பட்டதை அ.தி.மு.க அரசு நடைமுறைப்படுத்தாமல் காலம்தாழ்த்தி வருவதைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மேலான ஆணைக்கிணங்க இன்று கரூர் மாநகரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், தொழில் செய்ய இடம் வாங்கியுள்ள பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முயற்சி மேறகொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பேருந்து நிலையத்தை மக்கள் விரும்பக்கூடிய இடத்தில் அமைக்காமல் சுயநலத்திற்காக புறநகர் பகுதியில் அமைக்க ஆளும் எடப்பாடி அரசு முயற்சி செய்கிறது.

நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப் படுத்தக்கூடிய வகையில் ஆளுகின்ற எடப்பாடி அரசு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை உடனடியாக தொடங்கி, மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவேண்டும்.

இந்தப் போராட்டத்திற்கு நாங்கள் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் அனுமதி கேட்டிருந்தோம். காவல்துறையினர் எங்களுக்கு தாலுகா அலுவலகத்தில் இட நெருக்கடியான இடத்தில் அனுமதி வழங்கினார்கள். இருந்தபோதும் கூட நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு தாலுக்கா அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ரவுண்டானா அருகில் கட்டப்பட்ட தி.மு.க கொடியை காவல்துறை உதவியோடு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அகற்றிவிட்டார்கள். இந்த செயல் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.