Tamilnadu

ஆட்டோ ரேஸில் ஈடுபட இவ்வளவு கண்டிஷன்களா? அதிர்ந்து போன சென்னை போலிஸார்!

சென்னை போரூரில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட பிரபாகரன் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலிஸார் அதிர்ந்து போயுள்ளனர்.

போரூர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் கடந்த 14ம் தேதி ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட பிரபாகரன் என்பவர் முன்னால் சென்ற லாரியில் மோதியில் விபத்துக்குள்ளானர். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

ஆட்டோ ரேசின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் உள்ள வாகன எண்ணை வைத்து இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 6 பேரை கைது செய்த தனிப்படை போலிஸார் அவர்களிடமிருந்து 3 ஆட்டோ, கார் மற்றும் மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்த போது, ஆட்டோ ரேஸ் தொடர்பான நிபந்தனைகளை விளக்கியுள்ளனர். அதில், "வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்காக ரேஸ் நடத்தப்பட்டாலும், அதில் யார் கெத்து என்பதை காண்பிப்பதற்காகவே ரேஸில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபடுகின்றனராம். ரேஸில் ஈடுபடும் ஆட்டோகள் குறிப்பிட்ட எஞ்சின், உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் குறிப்பிட்ட வகையை மட்டுமே சேர்ந்ததாக இருக்கவேண்டும்"

"அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் இந்த ரேஸ் சென்னையை அடுத்த பைபாஸ் சாலைகளான தாம்பரம் - மதுரவாயல், வண்டலூர் - மீஞ்சூர் ஆகிய பகுதிகளிலேயே நடைபெறும்.

ரேஸின் போது விபத்து ஏற்பட்டால் பைக்கில் இருந்து தவறி விழுந்ததாகவே போலிஸாரிடம் கூறவேண்டும் என்பது தான் இந்த பந்தயத்தின் முக்கிய நிபந்தனை. இதற்காக ஒரு வாட்ஸ் அப் குழு வைத்து இயக்கி வருகிறோம்" என தெரிவித்துள்ளனர்.

இந்த நிபந்தனைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிஸார் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பைபாஸ் சாலைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டோ அல்லது பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.