Tamilnadu

கேள்வி கேட்ட பெண்ணை அறைந்த தீட்சிதரை கைது செய்யாத காவல்துறை - கொந்தளிப்பில் சிதம்பரம் மக்கள்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த செவிலியர் லதா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடுவதற்காகச் சென்றார். அப்போது அர்ச்சனை செய்யாமல் வெறும் தேங்காய் மட்டும் உடைத்துக்கொடுத்த தீட்சிதரிடம் லதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி தீட்சிதர் தர்ஷிண், லதாவை திட்டி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தீட்சிதர் தர்ஷிண் மீது போலிஸில் லதா புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இந்தப் புகாரின் பேரில் (குற்ற எண் 351/2019) தகாத வார்த்தைகளால் திட்டுதல், அடித்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read: ’ஏன் அர்ச்சனை செய்யவில்லை’ எனக் கேட்ட பெண்ணைத் தாக்கிய சிதம்பரம் கோவில் தீட்சிதர் - போலிஸ் வழக்குப்பதிவு

மேலும் தீட்சிதர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை போலிஸார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் தீட்சிதர் தர்ஷிண் தலைமறைவாகவில்லை போலிஸார்தான் அவரை பிடிப்பதில் அலட்சியம் காட்டுவதாக கடலூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று மாலையில் இருந்து இரவு 10 மணிவரை தீட்சிதர் கோயில் வளாகத்தில் இருந்துள்ளார். பின்னர் எந்த கெடுபிடியுமின்றி இரவு வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் முன்ஜாமீன் மனு அளிக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார்.

இதனிடையே இன்று முன்ஜாமீன் பெற தீட்சிதர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இரண்டு நாள்களாக வீட்டில் இருந்த ஒருவரைக் கூட சிதம்பரம் போலிஸார் பிடிக்காமல் அலட்சியம் காட்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது என சிதம்பரம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ்

மேலும், போலிஸாரின் இந்த ஆமை வேக தேடுதல் வேட்டைக்கு கடலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ் ஐ.பி.எஸ் காரணம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அபினவ் கடலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராகப் பதவியேற்றுள்ளார்.

இவர் பதவியேற்ற நாளென்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற்றக் கோவில் விழாவின்போது கோயிலுக்குச் சென்று காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ் வழிபட்டுள்ளார்.

இந்த வழிப்பாட்டின் போது தீட்சிதர்கள் அவருக்கு சாமி தரிசனம் செய்து வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் தீட்சிதர் மீது நடவடிக்கை எடுக்க போலிஸார் தயக்கம் காட்டுவதாகவும் ஒருதரப்பு மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

முக்கிய வழக்குகளின் குற்றவாளிகளை விரைந்துப்பிடிக்கும் திறமைப் பெற்ற தமிழக போலிஸார், தீட்சிதர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தீவிரமாக தேடி வருகின்றோம் என சொல்வது மக்களை ஏமாற்றும் பேச்சாக இருப்பதாகவும், இதனால் மக்கள் போலிஸாரின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்று கடலூர் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.