Tamilnadu
ஒரே நாளில் 12 மாவட்டங்களைச் சிதைத்த ‘கஜா’ - ஓராண்டாகியும் மீள வழியற்றுத் தவிக்கும் மக்கள்!
கடந்த ஆண்டு இதே நாளில் வீசிய, ‘கஜா’ புயல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களை புரட்டியெடுத்தது. கஜாவில் சிக்கிச் சிதைந்த மக்கள் ஓராண்டாகியும் இன்னும் மீண்டபாடில்லை.
கடந்த ஆண்டு, நவம்பர் 15 நள்ளிரவு முதல் அடுத்த நாள் வரை சுழற்றியடித்த கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்தன. பலர் பலியாகினர். நான்கு லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான, மின் கம்பங்கள், 1000க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன.
மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் முழுவதும் மழை வெள்ளத்தில் மடிந்துபோயின. சேதமடைந்த பயிர்கள் மட்டும் 88,102 ஹெக்டேர் அளவிலானது. மக்கள் வளர்த்த கால்நடைகள் இறந்து தண்ணீரில் மிதந்தன. மீனவர்களின் படகுகளும், வலைகளும் புயல் காற்றில் சிதைந்தன.
ஒரே நாளில் விவசாயிகளின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியது ‘கஜா’ புயல். ஆட்சிபுரிந்த அ.தி.மு.க அரசோ கண்டுகொள்ளாமல் காலம்தாழ்த்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மக்கள் முகம் காணாமல் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதிலாக, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தற்போது வரை அறிவிப்பாக மட்டுமே இருப்பதுதான் அவலம்.
இதனால், பல குடிசை வீடுகள் தற்காலிகமாகப் போர்த்தப்பட்ட தார்பாய்களுடன் காட்சியளிக்கின்றன. இன்னும் முழுமையாக சீரமைக்கப்படாத சிதைந்து போன வீடுகளில்தான் மக்கள் வசித்து வருகின்றனர். புயலால் மரங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகை முழுமையாக சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலுவையில் இருக்கிறது. ஓராண்டு கடந்த பின்னும் புயல் சிதைத்த சுவடு மறையாமல் கலங்கும் மக்களுக்கு இனியாவது நிவாரணம் கிடைக்குமா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!