Tamilnadu

“கர்நாடகா அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி; அ.தி.மு.க அரசின் அலட்சியமே காரணம்” - வைகோ குற்றச்சாட்டு!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, அணை கட்டத் தடையேதுமில்லை என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்குத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கர்நாடக மாநிலம், சிக்கப்பல்லூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க்கம் - நந்தி மலையில் உற்பத்தியாகும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர், தட்சிணப் பினாசினி ஓடை வழியாக கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாக தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைகின்றது.

தமிழகத்தில் 320 கி.மீ. தொலைவு பாயும் இந்த ஆறு, கொடியாளம் தடுப்பு அணையைத் தாண்டி, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்து சேருகிறது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் வழியாகப் பாய்ந்து கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே தமிழக எல்லை ஓரத்தில், 50 மீட்டர் உயரத்திற்கு தடுப்பு அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநிலம் முனைந்துள்ளது. 1892 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும் - மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசனத் திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் கர்நாடக அரசு, தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. இதனைத் தடை செய்யக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினித் சரண் அமர்வு விசாரணை நடத்தியது.

தென் பெண்ணை ஆறு

விசாரணை முடிந்து, நவம்பர் 14ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “1956ம் ஆண்டு நதிநீர் தவா சட்டப்படி தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு மற்றும் நதிநீர் சிக்கல் குறித்து மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

Also Read: மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழகத்தின் கருத்தை கேட்க முடியாது - கர்நாடகா அரசு அடாவடி!

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்குமாறு கோரும் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறது.

தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது, தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதற்கு ஏற்ப, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.