Tamilnadu

“ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை” - மு.க.ஸ்டாலின் சாடல்!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 8ம் தேதி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

தனது தற்கொலைக்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் எழுதிய குறிப்பில், தனது தற்கொலைக்கு உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் எனவும், அவர்கள் மதரீதியாக தவறாகப் பேசியதாகவும், தரக்குறைவாகப் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் இன்று சென்னை வந்து டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

மாணவி ஃபாத்திமா லத்தீபை இழந்து வாடும் அவரது தந்தைக்கு ஆறுதல் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தற்கொலைக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது! இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.