Tamilnadu
“தமிழ்நாடு பாதுகாப்பானது என நம்பித் தானே அனுப்பினோம்...”- ஐஐடி மாணவி பாத்திமா தாயார் வேதனை!
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த பாத்திமா கடந்த நவம்பர் 9-ம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக் குறித்து விசாரணை நடத்தி சென்னை கோட்டூர்புரம் போலிஸார் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறி விசாரணையை முடித்துள்ளனர். ஆனால் இறந்த மாணவி, தனது தற்கொலைக்கு யார் காரணம் என்று கூறி இரண்டு குறிப்புகளை எழுதியுள்ளார்.
அதில் முதல் குறிப்பில், தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன்தான் காரணம் என்றும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் எழுதியுள்ளார். இறந்த மாணவியின் கைப்பேசி உள்ளிட்ட உபகரணங்கள் காவல்துறையினர் வசம் உள்ளபோது அதை அவர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில் மாணவி தற்கொலைக் குறித்து பாத்திமா லத்தீப் தாயார் ஊடங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப்பேட்டியில், “இஸ்லாமியர் என்பதால் வெளியூருக்கு அனுப்புவதற்கு அச்சமாக இருந்தது. தேசமும் முழுவதும் இந்துத்துவாவினால் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக முஸ்லிம் பெண்கள் அணியும் முக்காடுகூட என்மகளை அணியவிடவில்லை. முக்காடு அணிந்திருந்தால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு எதாவது தொல்லை வரும் என நாங்கள் அஞ்சினோம்.
ஆனால் நாங்கள் என்ன செய்ய, அவர் பெயர் பாத்திமா லத்தீப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. பாத்திமாவிற்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்கதான் முதலில் இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம்.
அவளிடம் சொன்னோம், “வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.. விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதாரணமாக படுகொலை (Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே” என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.
ஆனால் மெட்ராஸ் ஐஐடி-யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண் குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம் மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.
பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி-யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு பாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார். அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுதே ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்போதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?
சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18 வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?
ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5 நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை. இனியொரு பாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..” எனக் கூறினார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!