Tamilnadu

“இளம்பெண் படுகாயமடைய காரணமான அதிமுக கொடி கம்பம் வைத்தவர் மீது சட்டநடவடிக்கை தேவை” - தி.மு.க வலியுறுத்தல்!

ஆளும் அ.தி.மு.க.வினர் வைத்த கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்திற்கு நியாயம் கோரி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களை உடனடியாக விடுதலை செய்திடுவதோடு; கொடிக்கம்பம் வைத்தவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அறிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில், ஆளும் அ.தி.மு.க.வினரால் நடுரோட்டில் வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி சாப்ட்வேர் இஞ்சினியர் ரகு மற்றும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சென்னை, பள்ளிக்கரணையில் அ.தி.மு.க.வினரால் நடுச்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ ஆகியோர் பலியாகினர்.

இந்நிலையில், கடந்த 11-11-2019 அன்று, முன்பு கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனுராதா (எ) ராஜேஸ்வரி. வழக்கம் போல் கடந்த 11ம் தேதி காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் அருகே சாலையோரத்தில் நடப்பட்டிருந்த ஆளும் அ.தி.மு.க. கட்சி கொடி கம்பம் கீழே விழுந்து பின்னால் வந்த லாரி அனுராதா மீது ஏறி விபத்துக்குள்ளானதில், இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சேலத்தில் தமிழக முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அனைத்து ஊடகங்கள் செய்தி வெளிவந்தபோதும், முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் “இது குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை" என்று கூறியிருக்கிறார். கோவை மாநகர மக்களே இவ்விபத்து குறித்து கவலையுடனும், கோபத்துடனும் ஆர்ப்பரித்திருந்த நேரத்தில், இதுகுறித்து விபத்துக்கு காரணமானவர்கள்மீது நியாயமான விசாரணை நடத்தி, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தி, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, முறைப்படி, காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், அனுமதி மறுத்து கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை ஜனநாயகத்திற்கு விரோதமாக - அராஜகமாக கைது செய்துள்ளது ஆளும் அ.தி.மு.க. அரசு.

கோவை மாவட்டத்தில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த காவல்துறையினரிடம் முறையாக அனுமதி கேட்டும், தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, பிறகு உயர்நீதிமன்றத்தை அணுகி, அந்நீதிமன்றங்கள் மூலம் கூட்டம் நடத்திட வேண்டிய அவலநிலை உள்ளது.

இதற்கு மூல காரணமாக இருப்பது அம்மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க அமைச்சரும் - அவருக்கு உறுதுணையாக முதலமைச்சரும் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நடைபெற்ற நிகழ்வை மூடி மறைப்பதற்காக ஆளும் அ.தி.மு.க அரசு இதுபோன்ற ஜனநாயக விரோத - சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருவது கண்டனத்திற்குரியது.

எனவே, ஆளும் அ.தி.மு.க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, கைது செய்யப்பட்ட தி.மு.க தோழர்களை உடனடியாக விடுதலை செய்து, ராஜேஸ்வரிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உரிய நேர்மையான - நியாயமான விசாரணை செய்து, உரியவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென ஆளும் அ.தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.