Tamilnadu
“பா.ஜ.க ஐடி விங் தலைவர் சொல்வதும், ராஜேந்திர பாலாஜி ஒத்து ஊதுவதும்...” - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!
திருவள்ளுவரின் வரலாற்றை தி.மு.க மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், “கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் தி.மு.க பெரும் துரோகம் இழைத்துவிட்டது என அவதூறு பரப்பிய பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் உண்மையில் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் வாழ்கிறாரா? அல்லது வின்வெளியில் வாழ்ந்து வருகிறாரா? எனத் தெரியவில்லை.
ஏனெனில் கடந்த 60 ஆண்டுகளாக அதாவது தி.மு.க தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு வெற்றி வாகை சூடியது 1967ல் அறிஞர் அண்ணா தலைமையில் தான். அதன் பிறகு தற்போது வரை அதாவது 1967முதல் 1976 வரையிலும், அதன் பிறகு 1989-1991, 1996-2001, 2006-2011 என தமிழகத்தில் தி.மு.க ஆட்சி செய்தது சுமார் 23 ஆண்டுகள் மட்டும் தான்.
ஆனால் கடந்த 1977 முதல் 1988 வரையிலும், அதன் பிறகு 1991-1996, 2001-2006, 2011முதல் 2019 தற்போது வரை என சுமார் 28ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்தது, ஆட்சி செய்து கொண்டிருப்பது அ.தி.மு.க தான்.
எனவே நீங்கள் குற்றம் சுமத்துவதாக இருந்தால் ஒன்று இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒன்றாக சேர்த்து குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அல்லது அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி என்கிற அடிப்படையில் அ.தி.மு.கவை குற்றம் சுமத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அதை விடுத்து இத்தனை காலம் எங்கிருந்தோம் என்பது கூட தெரியாமல் தற்போது திருக்குறளையும், திருவள்ளுவரையும் காப்பாற்ற வந்த பாதுகாவலன் போல தி.மு.க மீது விழுந்து பிராண்டி, அ.தி.மு.க மீது கரிசனம் காட்டியிருப்பதைக் காண்கையில் "பா.ஜ.கவின் B டீம் அ.தி.மு.க" என்பதை "எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை" என உலக மக்களுக்கு நீங்களே உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
மேலும் "திருக்குறளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுங்கள்" என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோரிக்கை வைப்பதை விட ஆவின் நிறுவனத்தில் நடக்கும் பல கோடி ரூபாய் ஊழல்களை, முறைகேடுகளை களைந்து தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினை காப்பாற்ற கோரிக்கை முன்வையுங்கள். ஆவின் நிறுவனம் ஊழல் முறைகேடுகளில் இருந்து காப்பாற்றப்பட்டால் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
அதை விடுத்து நீங்கள் ட்விட்டரில் பதிவிடுவதும், அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஒத்து ஊதுவதும்... "தில்லானா மோகனாம்பாள் மாதிரியே ஆஹா... ஆஹா..." என்றிருக்கிறது.
உங்களுடைய செயல் பார்க்க வேண்டுமானால் அழகாக இருக்கும். ஆனால் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஐயன் திருவள்ளுவருக்கு எந்த நிறத்தைப் பூச நினைத்தாலும் அதைப் பார்த்து தமிழர்கள் ஏமாறப்போவதில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!