Tamilnadu
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி போனில் ஆசிரியர் பெயர்?- தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார்!
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த பாத்திமா கடந்த நவம்பர் 9-ம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகமும் போலிஸாரும் உண்மையான காரணங்களை கூறாமால் மூடிமறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுபோல தொடர் தற்கொலைகள் குறித்தும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் மாணவர் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து பேர் வரை தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியரின் தற்கொலையும் அடங்கும். ஆனால் இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையோ, நடவடிக்கைகளோ இதுவரை எடுக்கவில்லை.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பாத்திமா லத்தீப் என்ற சமூகவியல் துறை பயிலும் முதுகலை மாணவி திடீரென தற்கொலை செய்து இறந்து போனார். சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய காவலர்கள் சென்று விசாரணை நடத்தி மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையை முடித்துள்ளனர்.
ஆனால் இறந்த மாணவியின் குடும்பத்தினர் மாணவி பாத்திமா லத்தீப்பின் வலைதளங்களை ஆய்வு செய்த போது அதில் நோட் (குறிப்பேடு) எனும் செயலியில் அந்த மாணவி தற்கொலைக்கு காரணமாக இரண்டு குறிப்புகளை எழுதியுள்ளார்.
அதில் முதல் குறிப்பில் ஒரு பேராசிரியரின் பெயரையும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் தற்கொலைக்கு காரணமாக எழுதியுள்ளார். இறந்த மாணவியின் கைபேசி உள்ளிட்ட உபகரணங்கள் காவல்துறையினர் வசம் உள்ளபோது அதை அவர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை எனத் தெரிய வருகிறது.
எனவே தமிழக காவல்துறை இதுகுறித்து உறுதியான விசாரணை நடத்திட உத்திரவிட வேண்டும். அதேபோல் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இதுகுறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைத்து தொடர் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐஐடி நிர்வாகமும் பிரச்னைகளை மூடி மறைக்காமல் மாணவர்களோடு இணைந்து மனநல ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!