Tamilnadu
“துரோகத்தால் முதல்வரான எடப்பாடிக்கு சிவாஜியை விமர்சிக்கத் தகுதி இல்லை” - சிவாஜி சமூக நலப் பேரவை கண்டனம்!
நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் எனப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிதாகக் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் என்று கூறி கிண்டலடித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று இவருடைய கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி அமைத்தபோது, அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி என்பதை தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்து சொன்னால் நல்லது.
சிவாஜி கணேசனைப் பற்றி குறை கூறுவதற்கு, யார் காலையோ பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்த இவருக்கு எந்த அருகதையும் இல்லை. சிவாஜி நினைத்திருந்தால் அவருக்குப் பதவிகள் தேடி வந்திருக்கும். ஆனால் அவருடைய சுயமரியாதையினாலேயே அவர் எந்தப் பதவியையும் தேடிப் போகவில்லை.
சிவாஜி கட்சி ஆரம்பித்தது மற்றும் தோல்வி அடைந்ததற்குக் காரணமே, தன்னுடைய உடன்பிறவா சகோதரராகப் பழகிய எம்.ஜி.ஆரின் ஆட்சி, அவருடைய துணைவியார் ஜானகி தலைமையில் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் என்ற வரலாறை, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் தமிழக முதல்வர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் திலகத்தால் அரசியலில் பதவிகளைப் பெற்றவர்கள் ஏராளம். யாருக்கும் துரோகம் செய்து பதவிகளை அடைய வேண்டும் என்று நினைக்காத நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி குறைகூற, விபத்தினால், துரோகத்தால், இன்று தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. பதவியிலிருக்கும் வரைதான் இவர்களுக்கெல்லாம் மரியாதை. ஆனால் தமிழ் வாழும் வரை நடிகர் திலகம் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை.
வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், நாட்டுப் பற்றுடன், நாட்டுக்காக, விளம்பரமில்லாமல் சேவையாற்றி, காமராஜரின் சீடராக தன் இறுதிக் காலம்வரை வாழ்ந்து மறைந்த, நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி வரலாறு தெரியாமல், தேவையில்லாமல் இழுப்பதை இனியாவது தமிழக முதல்வர் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!