Tamilnadu

இன்று பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன் - குடும்பத்தினர் மகிழ்ச்சி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் ஒரு மாத பரோலில் இன்று வெளியே வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் சுமார் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

எழுவரையும் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்ப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தனது மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் பரோல் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்ற சிறைத்துறை ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது. இதையடுத்தும் இன்று பிற்பகல் சிறையிலிருந்து இரண்டாம் முறையாக ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்.