Tamilnadu

முழு பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்... தொடர்கிறது ‘ரெட் அலெர்ட்’!

அயோத்தி தீா்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையம் தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே உச்சகட்ட பாதுகாப்பான "ரெட்அலர்ட்டில்" உள்ளது. இந்நிலையில் தற்போது அயோத்தி தீா்ப்பும் வருவதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புபடையினரின் அனைத்து விதமான விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டு, அவா்கள் அனைவரும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு அவா்கள் பணி நேரம் மறுஉத்தரவு வரும்வரை 12 நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக போலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, பயணிகள் பாதுகாப்பு சோதனை பகுதி, சரக்கு பாா்சல்கள் அனுப்பும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகத்திற்குள் விமான பயணிகள், பயணிகளை வழியனுப்ப வருபவா்கள், விமான நிலைய ஊழியா்கள் மற்றும் அதைச் சாா்ந்த நிறுவனங்களை சாா்ந்தவா்கள், பாதுகாப்பு பணியில் உள்ளவா்கள் போன்றவா்களை தவிர மற்றவா்கள் உள்ளே அனுமதியில்லை. அவா்களும் உரிய அடையாள அட்டைகளுடன் மட்டுமே உள்ளே வரமுடியும்.

அதேபோல் விமான பயணிகளுக்கும் வழக்கமான சோதனைகளுடன் கூடுதலாகவும் ஒன்று அல்லது இரண்டுமுறைகள் சோதனைகள் நடத்தப்படுகின்றன. எனவே சா்வதேச பயணிகள் விமானம் புறப்படுவதற்கு மூன்றரை மணி நேரம் முன்னதாகவும், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும் விமான நிலையம் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.