Tamilnadu

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

கால முறை ஊதியம், பதவி உயர்வு, உயர் கல்வியில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு மருத்துவர்கள் 7 நாட்களாக வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் அரசு அளித்த உத்தரவாதத்தின் பேரில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ என்று சொல்லக்கூடிய துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸும் பணிமாறுதல் உத்தரவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கில் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கை விட்டதாகவும், தற்போது உத்தரவாதத்தையும் மீறி இதுபோல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாக இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.