Tamilnadu
“நீட் தேர்வில் ஊழல், மோசடி முறைகேடுகளால் தகுதியற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது” : வைகோ ஆவேசம்!
அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளவர்களில் 100 சதவித மாணவர்கள் நீட் பயிற்சி மையத்தின் மூலம் சென்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளனர். மேலும் இந்தாண்டு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பில் 3,081 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதில், 48 பேர் மட்டும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் நீட் பயிற்சி மையம் சென்று படிக்க கூடிய வசதி உள்ளவர்களால் மட்டுமே மருத்துவம் படிக்கமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
நீட் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது என்பதை தொடர்ந்து நாம் கூறி வருகிறோம். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ள தகவல்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3081 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெறும் 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்காக தனிப் பயிற்சி பெறாதவர்கள் மற்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்து, தனிப் பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
தருமபுரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், செங்கற்பட்டு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 விழுக்காடு நீட் தேர்வுக்காக தனிப் பயிற்சி பெற்ற மாணவர்கள்தான் சேர்ந்துள்ளனர். அதே போன்று சில தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 98 விழுக்காடு நீட் நுழைவுத் தேர்வு தனிப் பயிற்சி பெற்றவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
மேலும், 1040 மாணவர்கள் மட்டுமே முதல் முறையாக நீட் எழுதி, தேர்வு பெற்றுள்ளனர். 2041 மாணவர்கள் நீட் தேர்வை ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இலட்சக்கணக்கில் செலவு செய்து நீட் தேர்வு எழுத தனிப் பயிற்சி பெற முடியாத நிலையில், மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி என்ற உண்மையை மாண்பமை நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் விதிமுறைகள் வகுக்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவோ வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
பனிரெண்டாம் வகுப்பில் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் பொதுத்தேர்வுக்கும் தயாராக வேண்டும். நீட் நுழைவுத் தேர்வுக்கும் தயாராக வேண்டும். ஆனால், ஏற்கனவே பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் நீட் தேர்வுக்கு மட்டும் பயிற்சி பெற்று ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதி மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்து விடுகின்றனர். இது மிகப்பெரிய அநீதியாகும்.
தமிழகத்தில் ஐந்து மாணவ - மாணவியர் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதி உள்ள முறைகேடுகள் வெளிப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நடைபெறுகின்ற ஊழல்கள், முறைகேடுகளால் தகுதியற்றவர்கள்கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றுவிடும் நிலை உருவாகி இருக்கிறது.
அரியலூர் அனிதா உள்ளிட்ட ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகத்து மாணவிகள் மருத்துவக் கல்வி என்பது கனவாகிப் போனதால் தங்கள் உயிர்களை போக்கிக் கொண்டுள்ளனர். மொத்தத்தில் மருத்துவக் கல்விக்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!