Tamilnadu
நம் நெஞ்சை வருடி, நிமிர வைக்க, காட்சி வடிவமாக நேரில் வருகிறது, ’நெஞ்சுக்கு நீதி’ - மு.க.ஸ்டாலின் மடல்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
நம் எல்லோருடைய உயிரோடு கலந்து உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர், நம் இல்லத்தில் அவர் எழில்நடை காட்டி உலவினால் எப்படி இருக்கும்?
நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் மணக்கிறது, இனிக்கிறது அல்லவா? அதுவும், "நெஞ்சுக்கு நீதி"யே நம் கண்ணெதிரே வந்தால், எத்தனை இன்பம் தரும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்!
புதிய பொலிவுடனும் பொருளுடனும் தகுதிமிக்க நவீனத் தரத்துடனும், தன் ஒளிபரப்பைத் தொடர்ந்து வரும் "கலைஞர் செய்திகள்" தொலைக்காட்சி வழியே, உடன்பிறப்புகளைக் காணவும் உற்சாகம் ஊட்டவும் வருகிறார், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.
நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால், "என்னை முழுதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர்கள் என்று சொல்லத் தக்கவர்களிலே, கலைஞர் கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. அவர் மூலமாக நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம்.
இப்பொழுது செய்திருக்கிற காரியங்களைப் போலப் பலமடங்கு அதிகமான காரியங்கள், அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்கு இன்னும் கிடைக்க வேண்டியிருக்கிறது" - இது பேரறிஞர் அண்ணாவின் திருவாக்கு.
தனது தம்பியரில் தனித்திறனும் தளும்பும் ஆற்றலும் கொண்ட தம்பியான தலைவர் கலைஞர் அவர்களை, நமக்கும் - நாட்டு மக்களுக்கும் உருவாக்கித் தந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்ன, கல்வெட்டு வார்த்தைகள் இவை.
பேரறிஞர் அண்ணா மறைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னால் (3.6.1968), இந்த ஏற்றமிகு கருத்தை, கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவின்போது குறிப்பிட்டார்.
இப்பொழுது செய்திருக்கிற காரியங்களை விட பல மடங்கு காரியங்களை, இன - மொழி உயர்வுக்கு, கலைஞர் அவர்கள் செய்வார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எதிர்பார்த்ததை, அவரது தம்பியான நம் தலைவர் எள்ளளவும் ஏமாற்றவில்லை. பலமடங்கு மட்டுமல்ல, பலப்பல மடங்குச் சாதனைகளைச் செய்து தனிச்சரித்திரம் படைத்தவர்தான் நம் தலைவர்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் எவ்விதப் பின்புலமும் - தாங்கிப் பிடிக்கும் சக்திகளும் இல்லாமல், தான் ஏற்றுக் கொண்ட கொள்கையையும், அதனை நிலைநிறுத்துவதற்கான அயராத உழைப்பையும் மட்டுமே உறுதுணையாகக் கொண்டு 5 முறை முதலமைச்சர் ஆனவர் தலைவர் கலைஞர் அவர்கள். எண்ணற்ற குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் அடையாளம் கண்டு உருவாக்கிய பேராற்றலாளர். அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் அரசியல் சக்கரத்தைச் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்தவர். சக்கர நாற்காலியில் இருந்தபடியே டெல்லி சர்க்காரைச் சுழலவைத்தவர். வாழும்போதே வண்ணமிகு வரலாறாக வாழ்ந்தவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அவரது வரலாறு என்பது, தனிப்பட்ட கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல, கழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழினத்தின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறுகளுடன் தொடர்புடையதுதான் கலைஞரின் வரலாறு. அதனால்தான் அவர் மறைந்தபோது, அகில உலகமே ஆற்றாது அழுதது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் உற்றதுணையை - தோழமையை -உரிமைக்குரலை இழந்ததாக வாடினர்.
பன்முக ஆற்றல் கொண்ட சளையாத உழைப்பாளரான தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளவும், உணரவும், உயரவும் எல்லோருக்கும் ஏதோ ஒன்று இருந்தது.
அவரது எழுத்துக்கள், அவரது பேச்சுக்கள், அவரது செயல்கள், விடாமுயற்சி, போராட்டக் குணம், உழைப்பு, கொள்கைப் பற்று, தளராமை, கண்துஞ்சாமை, காவல் திறன், இலக்கியம், திரை, பாடல்கள், போராட்டங்கள், வாதத் திறன், சட்டமன்றம், அமைச்சு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரச்சாரம், பொருளாளர், டெல்லி அரசியல், கூட்டணிகளை உருவாக்குதல், பிரதமர்களைத் தீர்மானித்தல், குடியரசுத் தலைவர்களைத் தீர்மானித்தல், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் நலன், பெண்கள் நலம், மாற்றுத் திறனாளிகள் நலன்,விளிம்பு நிலை மக்கள் மேம்பாடு - என அவரிடம் இருந்து ஒவ்வொருவரும் ஒன்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
தன்னைத் தலைவராகப் போற்றிய உடன்பிறப்புகளுக்கு மட்டுமல்ல, காலமெல்லாம் தன்னை எதிர்ப்பதினாலேயே அரசியல் வெளிச்சம் தேட முயன்றோருக்கும், கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உண்டு. எதிர்ப்போரும் ஏற்றுக்கொள்ளும் பண்புகளும் திறமைகளும் வாய்ந்த, அரசியலைக் கடந்த ஆற்றலாளர் (Statesman) நம் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவரே சூரியன்! அவரே வானம்! அவரே நிலம்! வானத்தின் கீழ் சூரிய ஒளியில் பச்சையம் தயாரித்த நிலத்தில் வாழ்ந்த அனைவரையும் அவர் தாங்கிப் பிடித்தார்.
முத்தமிழறிஞரை மிஞ்ச யாராலும் முடியுமா? முடியாது என்றாலும், அவரைப் போல முயற்சிக்க முடியும். அவரது வாழ்க்கை வரலாறுதான், அந்த முயற்சிக்கான முன்னோடியான முழுமுதல் அரிச்சுவடி.
அவர் எப்படி வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடியும் அதுதான். அந்த அரிச்சுவடிதான், தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய தன்வரலாறான "நெஞ்சுக்கு நீதி".
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றை எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள். அவை எல்லாம் கலைஞரை வெளியில் இருந்து பார்த்து எழுதியது. "நெஞ்சுக்கு நீதி"தான், அவரே தன்னை உள்ளுக்குள் இருந்து பார்த்து எழுதியது.
1924 முதல் 1969 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' முதல் பாகமாக வெளியானது.
1969 முதல் 1976 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகமாக வெளியானது.
1976 முதல் 1988 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' மூன்றாம் பாகமாக வெளியானது.
1989 முதல் 1996 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' நான்காம் பாகமாக வெளியானது.
1996 முதல் 1999 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகமாக வெளியானது.
1999 முதல் 2002 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' ஆறாம் பாகமாக வெளியானது.
ஐந்தாம் பாகம் வெளியீட்டு விழா 2.6.2013 அன்று நடந்தபோது அதில் ஏற்புரை ஆற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ''ஆறாம் பாகம் உண்டா என்றால், இன்னும் நெஞ்சு இருக்கும் வரையில், நீதி நிலைக்கும் வரைக்கும் எழுதுவேன். எழுதிக் கொண்டே இருப்பேன்!" என்று, அரங்கம் அதிரக் குறிப்பிட்டார்.
ஆறாம் பாகம் வெளியீட்டு விழா 14.12.2013 அன்று நடந்தபோது அதில் ஏற்புரை ஆற்றிய கலைஞர் அவர்கள், ''ஏழாம் பாகம் உண்டா என்று கேட்பீர்களேயானால், அது எனக்குத் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. இயற்கைக்குத்தான் தெரியும். இயற்கை இடம் கொடுத்தால் ஏழாம் பாகம், எட்டாம் பாகம், ஒன்பதாம் பாகம் எல்லாம்கூட வெளிவரும்" என்று நம்பிக்கை பொங்கக் கூறினார்.
அதன்பிறகும் சில பகுதிகளை எழுதினார்கள். ஆனால் அது ஏழாம் பாகமாக முழுமை பெறுவதற்கு முன்பே கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டார்கள்.
முதுமை தவிர வேறு எந்த உடல்நலக் குறைவும் இல்லாமல், கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு பெறும் சூழ்நிலை உருவானது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
தான் அளித்த வாக்குறுதிப்படி, அண்ணாவிடம் இரவலாகப் பெற்ற இதயத்தைத் திருப்பித் தரும் வகையில், வாழ்வில் மட்டுமின்றி இறப்பிலும் நாம் கற்க வேண்டிய பாடத்தைக் கற்றுத் தந்தவர்.
அவர் வாழ்வு நிறைந்தாலும், நித்தமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
நமது உடலில், உதிரத்தில், இதயத்தில், சிந்தனையில், செயலில் இரண்டறக் கலந்து விட்டார். அவருடைய நெஞ்சும் நீதியும் நம்மோடு கலந்துவிட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்து செய்ய வேண்டியதை அவரது இலட்சக்கணக்கான தொண்டர்கள் துணையோடு செய்து வருகிறோம்.
உங்களில் ஒருவனாக - தலைவரின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் ஒருவனாக, இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை உங்களுடைய ஒப்பற்ற ஒத்துழைப்போடும் ஒத்தாசையோடும் தோளில் சுமந்து கவனமாகப் பயணிக்கிறேன்!
எனக்கு வலிவு தருவது தலைவர் கலைஞர் என்கிற பேராற்றல்தான். என்னை வழிநடத்துவதும், அவரிடம் கற்ற இலட்சியப் பாடங்கள்தான்.
“இனி இருப்பது நீடித்த பயணமோ, குறுகிய காலப் பயணமோ - எனக்குத் தெரியாது! அது பற்றிய கவலையுமில்லை! நடை தள்ளாடலாம் - தடைபடலாம் - முடிவுற்றுப் போய்விடலாம். ஆனால் நான் பெற்றுள்ள அந்த உணர்வுகளுக்குத் தள்ளாட்டமில்லை! முடிவே இல்லை! இல்லவே இல்லை!" - என்றவர் கலைஞர் அவர்கள்.
அத்தகைய உன்னத உணர்வை நாம் பெற வேண்டாமா? அந்த உணர்வை நமக்கு ஊட்டுவதே கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி".
ஆறு பாகங்களாக அவை படிக்கக் கிடைக்கின்றன. சுமார் நான்காயிரம் பக்கங்கள். அது இயக்க வரலாறு மட்டுமல்ல. அவரது இதயம் எழுதிய இந்திய வரலாறு.
அந்த மொத்தப் பக்கங்களும் காட்சிகளாக வரப் போகிறது 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில்.
கலைஞர் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இனி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகிறது.
நவம்பர் 2ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது, "நெஞ்சுக்கு நீதி" காட்சிப் புத்தகம். "கலைஞர் செய்திகள்" தொலைக்காட்சி வழியாக, தலைவர் கலைஞர் அவர்கள், ஒவ்வொரு உடன்பிறப்பின் இல்லத்திலும் உலவ வருகிறார். ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் குடியேற வருகிறார்.
தலைவர் கலைஞர் வரலாற்றைக் காண்பதன் மூலமாக, கலைஞரின் உணர்வைப் பெறுவோம்! கலைஞர் படைத்த சாதனைச் சரித்திரத்தை, அவருடைய உடன்பிறப்புகளான நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியும் தொடர்வோம்!இனத்தின் வெற்றியையும், மொழியின் பெருமையினையும் மீட்டெடுத்து, கண்ணயராது காப்போம்!
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!