Tamilnadu
சுஜித் மீட்புப்பணியில் என்ன நடந்தது ? : விரைவில் முழு அறிக்கை வெளியீடு - வருவாய் ஆணையர் விளக்கம் !
ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் மீட்புப்பணி குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''மீட்பு பணியில் 600க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருந்தனர். மிக வேதனையுடன் தான் அவர்கள் அங்கே பணியாற்றி இருக்கின்றனர். ஒவ்வொரு நொடியும் குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று தான் பணியில் ஈடுபட்டோம்.
துரதிஷ்டவசமாக குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. சுஜித் இறப்பு எல்லோருக்குமே வேதனையை அளித்திருக்கிறது. அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு தான் உடல் மீட்கப்பட்டது.
ஒளிவு மறைவின்றி இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தான் அடுத்து எடுக்கவேண்டும்.
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளை காட்சிபடுத்தியது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து அதன் பிறகு மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்தது. அந்த விதிமுறைகளை பின்பற்றி தான் குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. சடலம் என்ன மாதிரியான நிலையில் இருந்தது என்பதை பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
இந்திய அளவில் இருக்கக்கூடிய அனைத்து வகையான உபகரணங்களையும் பயன்படுத்தி தான் மீட்பு பணிகள் நடைபெற்றன. மனிதனால் முயன்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
இது குறித்து மேலும் விவாதிப்பது விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும். சுஜித் மாதிரியான இறப்புகள் அடுத்து இருக்கக்கூடாது. ஆகையால் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் டி.என்.ஏ.மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து குழந்தை எப்போது இறந்தது என்ற போன்ற விவரங்கள் கிடைக்கும். இதற்கு மேல் இது குறித்து பேசுவது விதிமுறைக்கு மாறாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், சுஜித் உடல் மீட்புக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டதாக வரும் செய்திகள் குறித்துப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், சுஜித் உடல் மீட்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். பேரிடர் மீட்பில் பணம் பொருட்டல்ல. யாரும் பணம் கேட்கவில்லை. நான் இதுகுறித்து பேட்டியே கொடுக்கவில்லை" எனக் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!