Tamilnadu
“ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிப்பது அதிர்ச்சிகரமானது” - கே.எஸ்.அழகிரி வேதனை!
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித், கடும் போராட்டங்களுக்கிடையே சடலமாக மீட்கப்பட்டான்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக கடந்த ஐந்து நாட்களாக செய்த கடுமையான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்திருப்பது மிகுந்த துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்பதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசு உள்ளிட்ட ஓஎன்ஜிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை பாராட்டுகிற அதேநேரத்தில், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையைத் தருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட இத்தகைய உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதையொட்டி உச்சநீதிமன்றம், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை தனது தீர்ப்பில் கூறியதோடு, அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அந்த அறிவுறுத்தல்களை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பின்பற்றவில்லை. இந்தியாவிலேயே ஆழ்துளை கிணறுகள் விபத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கும் மாநிலமாக இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இத்தகைய ஆழ்துளை கிணறுகள் குறித்து வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை நிர்வாகங்கள் போதிய கண்காணிப்பு செய்யாத காரணத்தால் இதைப்போன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கிராம நிர்வாக அதிகாரி, விவசாயத்துறை அதிகாரி ஆகியோருக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால், இவர்கள் இப்பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
பேரிடர் மேலாண்மை என்பது பேரிடர் ஏற்படுவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். ஆனால், பேரிடர் ஏற்பட்ட பிறகுதான் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமுன் காப்பது என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால், இன்றைக்கு பேரிடர் ஏற்பட்ட பிறகு, அதை மேலாண்மை செய்கிற வகையில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டிருப்பது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், தமிழக ஆட்சியாளர்களின் நிர்வாகப் போக்கு குறித்து கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
எனவே, இத்தகைய சம்பவங்கள் இனி எந்த காலத்திலும் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன். நாட்டு மக்களின் கவனத்தையும், அனுதாபத்தையும் ஈர்த்து இன்று உயிரிழந்திருக்கிற சிறுவன் சுஜித் வில்சன் உயிருடன் மீட்கப்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது. உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!