Tamilnadu
நல்லடக்கம் செய்யப்பட்டது குழந்தை சுர்ஜித்தின் உடல்; கண்ணீர் ததும்ப பொதுமக்கள் அஞ்சலி!
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி கடந்த 80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
நேற்று (அக்.,28) இரவு 10.30 மணிவரை சுமார் 65 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளம் அதன் பிறகு நிறுத்தப்பட்டது. பாறையின் தன்மை குறித்து அறிவதற்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளேச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளத்திற்கு அடியில் இருந்து துர்நாற்றம் வந்ததுள்ளது.
இதனையடுத்து, ரிக் இயந்திரத்தைக் கொண்டு மேலும் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 65 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் இடுக்கி போன்ற கருவிகளைக் கொண்டு துளையிட்டு சிறுவன் சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மீட்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தை உயிரிழந்துவிட்டான் என்பதை வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன் பிறகு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுர்ஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறுவனின் உடலை சவப்பெட்டியில் வைத்து பெற்றோர் ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரியிடம் ஒப்படைத்தனர்.
சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தை வைக்கப்பட்டு மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுர்ஜித்தின் கல்லறையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தன்னுடைய குழந்தையை மீட்டெடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தவித்து வந்த தாய் கலாமேரிக்கும், தந்தை ஆரோக்கியராஜுக்கும் மட்டுமல்லாமல் ஒட்டொமொத்த தமிழகமே எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
இந்த நிலையில், குழந்தை சுர்ஜித்தின் உயிரிழந்துவிட்டான் என்ற செய்தி மணப்பாறையை மட்டுமின்றி தமிழகம் கடந்து அனைத்து தரப்பட்ட மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 5 நாட்களாக தொடர்ந்து போராடி வந்தபோதும் பலனளிக்காமல் சென்றுவிட்டதே என்ற அதிருப்தியும் பலர் தெரிவிக்கின்றனர்.
மேலும், சமூக வலைதளத்தில் #SaveSurjith என்ற ஹேஷ்டேக் மட்டுமல்லாமல் #SaveAllSurjith என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏனெனில், ஆழ்துளை கிணறுகளுக்கு பலியாகும் கடைசி குழந்தையாக சுர்ஜித்தே இருக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று எந்த வயதுடைய சுர்ஜித்துக்களும் சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
சுர்ஜித்தின் இழப்பு மக்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!