Tamilnadu

நீதிமன்றத்தை மதிக்காத அ.தி.மு.க; அமைச்சருக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் 12 அன்று அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு தாமாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்தது. விசாரணையில் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையாகச் சாடியது.

இந்தச் சம்பவத்திற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்களும், முன்னணி நடிகர்கள் பலரும், பேனர் வைக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆளும் கட்சி அமைச்சர் பங்கேற்ற விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் அமைச்சர் வி.சரோஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த பேனரை பார்த்த போலிஸாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், “சட்டவிரோத பேனரால் இளம்பெண் உயிரிழந்து சம்பவம் இன்னும் மறக்கமுடியவில்லை. பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் பேனர் வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். ஏன் நீதிமன்றம் கூட கடுமையாக சாடியுள்ளது.

ஆனால் அ.தி.மு.க-வினர் இந்த பேனர்கள் வைப்பதைக் கைவிடவில்லை. இந்த விவகாரத்தில் வழக்கம்போல அ.தி.மு.க நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை என்றே தெரிகிறது” எனத் தெரிவித்தார்.