Tamilnadu
சூழலியல் குற்றங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது தெரியுமா? - அதிர்ச்சித் தகவல்!
2017ம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2017ம் ஆண்டு இந்தியாவில் பதிவான சுற்றுச்சூழல் தொடர்பான குற்ற வழக்குகளில், அதிகபட்சமாக 49 விழுக்காடு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “கடந்த 2017ஆம் ஆண்டிற்கான "தேசிய குற்றஆவண பதிவேட்டின்" (NCRB) குற்ற புள்ளிவிவர அறிக்கை (crime statistics report) வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவில் நடைபெறும் சூழல் குற்றங்கள் 790% அதிகரித்துள்ளன. 2016ம் ஆண்டு 4,732ஆக இருந்த சூழல் குற்றங்கள், 2017ம் ஆண்டு 42,143 குற்றங்களாக அதிகரித்துள்ளன, இதில் சரிபாதி அதாவது 20,914 சூழல் குற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.
தமிழகத்திற்கு அடுத்து ராஜஸ்தான் பிறகு கேரளாவும் வருகின்றன. இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் 2015ம் ஆண்டு 17 சூழல் குற்றங்களும், 2016ம் ஆண்டு ஒரேயொரு சூழல் குற்றமும்தான் தமிழகத்தில் பதிவாகியுள்ளன.
இந்த அளவிற்கு சூழல் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம், 2003ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம், சூழல் குற்றங்களாக சேர்க்கப்பட்டதுதான். புகையில் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் கடந்த ஆண்டுகளில் சூழல் குற்றங்கள் பிரிவில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவை சூழல் குற்றப்பிரிவில் சேர்த்ததால் மட்டுமே சூழல் குற்றங்கள் 30% அதிகரித்துள்ளன.
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் 2003 யின் கீழ் அதிக எண்ணிக்கையிலான (29,659) குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஒலி மாசுபாடு சட்டங்களின் கீழ் (8,423 வழக்குகள்) மற்றும் இந்திய வனச் சட்டம், 1927 / வன (பாதுகாப்பு) சட்டம், 1980 ஆகியவற்றின் கீழ் 3,016 வழக்குகள் உள்ளன.
பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளில் 40,720 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 41,621 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மற்றும் 6,245 வழக்குகளில் விசாரணை நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் குற்றங்கள் பதிவுசெய்யப்படும் விதத்தில் அடிப்படை சிக்கல்கள் உள்ளன. சுற்றுச்சூழல் குற்றத் தரவுகளை சேகரிக்கப் பயன்படும் வரைமுறைகள் பற்றி குறிப்பிடப்படுவதில்லை என்கிறார் மும்பையின் டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியர் கீதன்ஜோய் சாஹு.
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம், 2003 சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும், உலகத்தில் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் ஏழு நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன என்பதும் கவனிக்கப்படவேண்டியது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?