Tamilnadu
“டெங்கு காய்ச்சலை தடுக்க நினைக்காமல், குடிகெடுக்கும் மதுவை விற்க இலக்கு நிர்ணயிப்பதா?”-முத்தரசன் கண்டனம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.385 கோடிக்கு மதுபான விற்பனை செய்ய அ.தி.மு.க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அ.தி.மு.க அரசின் இத்தகைய மோசமான நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார்.
அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, அவரது கொள்கைகளுக்கு மாறாக படிப்படியாக மது விற்பனையை அதிகரித்து வருகின்றது. தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு கடும் நெருக்கடியில் மக்கள் உள்ளனர்.
விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ள நிலையில், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்க செய்யப்படும். உணவுப் பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க செய்திட தேவையான அளவிற்கு உணவுப் பொருட்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை.
அதற்கு மாறாக தீபாவளிக்கு ரூ.385 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், பதினைந்து தினங்களுக்கு தேவையான மது வகைகளை மூன்றே நாட்களில் விற்பனை செய்திட முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மிகச் சரியான நேரத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் கடைகளை கால தாமதமாக திறக்கக் கூடாது என்றும், டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 25ல் 80 கோடிக்கும் 26ல் ரூ.130 கோடிக்கும், 27ல் (தீபாவளி அன்று) ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்திட டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மக்களுக்கு உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்வதிலோ, தட்டுப்பாடின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதிலோ, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்து மக்களின் உயிரை காக்கவோ உறுதி காட்டாத அரசு, மது விற்பனையை அதிகரித்து, ரூ.385 கோடிக்கு விற்றே ஆகவேண்டும் என்று உறுதியுடன் செயல்படும் அரசை எத்தகைய அரசு என்று கூறுவது? மக்கள் நலன் குறித்து சிறிதும் கவலைப்படாமல் மது விற்பனையை அதிகரித்து, மக்களை சீரழிக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை இந்நியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!